NATIONAL

புக்கிட் கெமுனிங் சாலையின் 30 ஆண்டுகால அவலம்-  சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் அதிருப்தி

9 ஜூலை 2025, 4:44 AM
புக்கிட் கெமுனிங் சாலையின் 30 ஆண்டுகால அவலம்-  சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் அதிருப்தி

(ஆர்.ராஜா)

ஷா ஆலம், ஜூலை 9 - இங்குள்ள புக்கிட் கெமுனிங் சாலையின் மோசமான நிலை காரணமாக இவ்வட்டார மக்கள் கடந்த 30 ஆண்டுகளாக எதிர்நோக்கி வரும் அவல நிலை குறித்து  கோத்தா கெமுனிங் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

கால்வாய்கள் பராமரிக்கப்படாதது, குப்பைகள் அகற்றப்படாதது, சாலை விளக்குகள் எரியாதது, சாலையில் மையக் கோடுகள் இல்லாதது மற்றும் குழிகள் நிறைந்து காணப்படுவது  உள்ளிட்ட பிரச்சனைகளை சுட்டிக்காட்டிய  அவர், இச்சாலையின் பராமரிப்பில் பொதுப்பணி  அமைச்சரும்  மாநில பொதுப்பணி இயக்குநரும் அலட்சியம் காட்டுவது குறித்து ஏமாற்றம் தெரிவித்தார்.

அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுச் செல்லும் நோக்கில் புக்கிட் கெமுனிங் சாலையில்  நிலவும் அவல நிலையை சித்தரிக்கும் காணொளி ஒன்றையும் சமூக ஊடகங்களில் பிரகாஷ் பதிவேற்றியுள்ளார.

அந்த காணொளிப் பதிவில்,   குப்பைக் கூளங்களால் நிரம்பியுள்ள சாலையோரக்  கால்வாய் ஒன்றின் மோசமான நிலையை அவர் சுட்டிக்காட்டினார். கடந்ந  முப்பது ஆண்டுகளாக இந்த கால்வாய் பராமரிக்கப்படவில்லை என்பது இப்பகுதி மக்களின் புகாராக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

கால்வாய் மட்டுமின்றி சாலையின் நிலையும்  மிக மோசமாக உள்ளது. இங்கு பல தடவை வெள்ளம் ஏற்பட்டுள்ளது. நாங்களும் எண்ணற்ற முறை புகார் அளித்து விட்டோம். ஆயினும் அதிகாரிகள் கண்டும் காணாதது போல் இருக்கிறார்கள் என அவர் சாடினார் .

தெரு விளக்கு வசதியும் மையக் கோடுகளும்  இல்லாத மற்றும் குழிகள் நிறைந்து காணப்படும்  இச்சாலையில் அடிக்கடி விபத்துகள் நிகழ்வதாகவும் அவர் சொன்னார்.

இப்பிரச்சனையில் பொதுப்பணி அமைச்சர் உடனடியாக தலையிட்டு உரியத் தீர்வினை  காண வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

கோத்தா கெமுனிங் தொகுதி குறிப்பாகp புக்கிட் கெமுனிங் வட்டாரத்தின் அவல நிலை குறித்து பிரகாஷ் குரல் எழுப்புவது இது முதன் முறையல்ல.

இவ்வாண்டு தொடக்கத்தில் நடைபெற்ற மாநில சட்டமன்றக் கூட்டத் தொடரின் போதும்  அவர்  இவ்விவகாரத்தை எழுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.