ரோம், ஜூலை 9 - வடக்கு இத்தாலியில் உள்ள பெர்கமோ விமான நிலையத்தில் புறப்படத் தயாராக இருந்த விமானத்தின் எஞ்சினுக்குள் சிக்கி ஒருவர் உயிரிழந்ததாக விமான நிலைய செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
முப்பது வயது மதிக்கத்தக்க அந்நபர் திடீரென விமான நிலையத்திற்குள் புகுந்து, அவசரப் பாதை வழியாக விமான ஓடுபாதையை நோக்கி ஓடியாதக் கூறப்படுகிறது. அதிகாரிகளும் துரத்திக் கொண்டு ஓட, அதற்குள் அங்கு புறப்படத் தயாராக இருந்த விமானத்தின் எஞ்சினுக்குள் சிக்கி அந்நபர் உயிரிழந்தார்.
அவர் பயணியோ அல்லது விமான நிலையப் பணியாளரோ கிடையாது என ஸ்பெயின் நாட்டின் Volotea விமான நிறுவனம் உறுதிப்படுத்தியது.
அச்சம்பவத்தில் விமானத்தினுள் இருந்த அனைத்து 154 பயணிகளும் 6 பணியாளர்களும் பாதுகாப்பாக இருப்பது உறுதிச் செய்யப்பட்டது.
அவர்களுக்கு மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதையடுத்து உடனடியாக மூடப்பட்ட விமான நிலையம் நேற்று மதியம் மீண்டும் செயல்படத் தொடங்கியது. இச்சம்பவம் குறித்து உடனடி விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.


