கோலாலம்பூர், ஜூலை 9 - பெட்டாலிங் ஜெயா, ஜாலான் தண்டாங்கில் உள்ள நான்கு மாடி மளிகைக் கிடங்கில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது. இச்சம்பவத்தில் மூன்று வெளிநாட்டினர் தெய்வாதீனமாக உயிர் தப்பினர்.
இத்தீவிபத்து தொடர்பில் இன்று அதிகாலை 3.05 மணிக்கு தமது துறைக்கு அவசர அழைப்பு வந்ததைத் தொடர்ந்து 16 உறுப்பினர்கள் மற்றும் ஐந்து தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டுப் பிரிவின் உதவி இயக்குநர் அகமது முக்லிஸ் முக்தார் கூறினார்.
இச்சம்பவ இடத்தில் "60 x 100 சதுர அடி பரப்பளவு கொண்ட ஒரு கிடங்கின் தரை தளத்தில் தீ விபத்து ஏற்பட்டதைக் அவர்கள் கண்டனர். இச்சம்பவத்தில் கட்டிட கட்டமைப்பில் 40 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அதிகாலை 4.04 மணிக்கு தீ முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டது என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
இவ்விபத்தில் பாதிக்கப்பட்ட அனைவரும், அதாவது ஒரு இந்தியர் மற்றும் ஒரு மியான்மர் தம்பதியினர் காயமடையவில்லை என்பது தெரிய வந்தது என அவர் குறிப்பிட்டார்.
தீறை அணைக்கும் நடவடிக்கைக்கு மூத்த தீயணைப்பு அதிகாரி II முகமட் ஷாருல் நிஜாம் சம்சுடின் தலைமை தாங்கினார். ஜாலான் பெஞ்சாலா பெட்டாலிங் ஜெயா மற்றும் டமன்சாரா தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய பணியாளர்கள் இந்நடவடிக்கையில் பங்கு கொண்டனர்.
தீ விபத்துக்கான காரணம் மற்றும் சேத மதிப்பு இன்னும் விசாரணையில் உள்ளது.


