கோலாலம்பூர், ஜூலை 9 - தம்பதியர் பயணம் செய்த கார் ஒன்று ஆற்றில்
விழுந்ததைத் தொடர்ந்து சம்பவ இடத்திலிருந்து தலைமறைவான
அவ்விருவரையும் போலீசார் வலை வீசித் தேடி வருகின்றனர்.
ஜாலான் குவாரி, சுங்கை லோங்கில் உள்ள ஆற்றில் கார் ஒன்று விழுந்தது
தொடர்பில் பொது மக்களிடமிருந்து நேற்று காலை 9.30 மணியளவில்
தாங்கள் புகாரைப் பெற்றதாகக் காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி
நஸ்ரோன் அப்துல் யூசுப் கூறினார்.
நேற்று காலை 9.00 மணியளவில் பலத்த சத்தம் கேட்டு சம்பவ இடத்தை
விரைந்த போது கார் ஒன்று ஆற்றில் விழுந்து கிடப்பதையும் அதிலிருந்து
ஆணும் பெண்ணும் வெளியேறி அங்கிருந்து அகன்றதையும் தாங்கள்
கண்டதாக சம்பவ இடத்திற்கு அருகில் வசிக்கும் பொதுமக்கள் கூறியதாக
அவர் குறிப்பிட்டார்.
அந்த கார் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினரின் உதவியுடன்
ஆற்றிலிருந்து மீட்கப்பட்ட சோதனை செய்யப்பட்ட போது அதில்
பயணிகள் யாரும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது என்று அவர்
அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
அந்த காரின் உரிமையாளரை தாங்கள் அடையாளம் கண்டுள்ளதாகக்
கூறிய அவர், அக்கார் வேறு ஒரு நபருக்கு வாடகைக்கு கொடுக்கப்பட்ட
வேளையில் அதனை தம்பதியர் இரவல் பெற்றது காரின் உரிமையாளர்
மூலம் தெரிய வந்தது என்றார் அவர்.


