சுக்காய், ஜூலை 9 - சமூக ஊடகம் வாயிலாக செயல்பட்டு வரும் போலி
பங்கு முதலீட்டுக் கும்பலின் விளம்பரத்தால் ஈர்க்கப்பட்ட பொறியாளர்
ஒருவர் 71,000 வெள்ளியை பறிகொடுத்தார்.
கடந்த ஏப்ரல் மாதம் 8ஆம் தேதி பேஸ்புக் பக்கத்தில் பங்கு முதலீடு
தொடர்பான விளம்பரத்தை கண்ட 40 வயதான அந்த பொறியாளர் மேல்
விபரங்களைப் பெறுவதற்காகப் பெண்மணி ஒருவரைத் தொடர்பு
கொண்டதாகக் கெமமான் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன்
முகமது ராஸி ரோஸ்லி கூறினார்.
ஒரு செயலி மூலம் சீனாவில் செயல்படும் ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்வதன் வாயிலாக
பெரும் இலாபத்தை ஈட்ட முடியும் என்று அந்த பெண்மணி பாதிக்கப்பட்ட நபரிடம் ஆசை வார்த்தைகளைக் கூறியதாக அவர் தெரிவித்தார்.
தொடக்கத்தில் சிறிய தொகையை முதலீடு செய்த அந்த ஆடவர் 600 வெள்ளியை இலாபமாகப் பெற்றார்.
இந்த இலாபத்தால் பெரிதும் கவரப்பட்ட அவர் கடந்த மே 27 முதல் ஜூன் 26
வரையிலான காலக்கட்டத்தில் 71,000 வெள்ளியை அத்திட்டத்தில் முதலீடு
செய்தார் என அவர் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டார்.
எனினும், வாக்குறுதியளித்தபடி இலாபத் தொகை வழங்கப்படாததைத்
தொடர்ந்து, தாம் ஏமாற்றப்பட்டதை அவ்வாடவர் உணர்ந்தார். சந்தேக
நபரைத் தொடர்பு கொள்ள அவர் மேற்கொண்ட முயற்சியும் தோல்வியில்
முடிந்தது என்று முகமது ராஸி சொன்னார்.
முதலீட்டுத் திட்டங்களில் பங்கு பெறுவதற்கு முன்னர் அது குறித்து
விரிவாக ஆராயும்படி பொதுமக்களை அவர் கேட்டுக் கொண்டார்.
முதலீட்டுத் திட்டத்தில் ஈடுபடும் தனி நபர்கள் அல்லது நிறுவனங்கள்
மலேசிய பங்குச் சந்தை ஆணையத்தில் பதிவு பெற்றுள்ளதா என்பதை
உறுதி செய்யும்படியும் அவர் கேட்டுக் கொண்டார்.


