சுபாங், ஜூலை 9 - பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் 13-வது மலேசியத் திட்டத்தில் இந்தியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வார் என்று தமக்கு நம்பிக்கை உள்ளதாக தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு துணை அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
"13-வது மலேசியத் திட்டத்தில், நம்முடைய பிரதமர் இந்திய சமுதாயத்தின் நலனுக்காக கண்டிப்பாக செயலாற்றுவார். மலாய், சீன, இந்திய மற்றும் சீக்கிய சமுதாயத்திற்கு இதனை வழங்க போகிறேன் என்று பிரதமர் தனிதனியாகக் கூற மாட்டார். ஏனென்றால், மடாணி அரசாங்கம் என்பது அனைவருக்கும் பொதுவானது", என்று அவர் கூறினார்.
சுபாங், INTI அனைத்துலக கல்லூரியில் நடைபெற்ற மாணவர் சமூக தொழில்முனைவோர் கருத்தரங்கிற்குப் பின்னர் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் டத்தோஸ்ரீ ரமணன் இதனை கூறினார்.
இதனிடையே, கெஅடிலான் கட்சியில் எந்த பிரச்சனையும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
அக்கட்சி இன்னும் வலுவான நிலையில் உள்ளதால் பொய்யான தகவல்களைப் பரப்புவதைச் சம்பந்தப்பட்ட தரப்பினர் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.
பெர்னாமா


