ஷா ஆலம், ஜூலை 9 - சுபாங் ஜெயா, புத்ரா ஹைட்ஸில் நிகழ்ந்த
பெட்ரோனாஸ் எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவம் தொடர்பான
தொழில்நுட்பக் குழுவின் விசாரணை அறிக்கையை ஆய்வு செய்வதற்காக
அமைக்கப்படவிருக்கும் சிறப்புக் குழுவில் ஏழு நிபுணர்கள் இடம்
பெற்றிருப்பர்.
கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி நிகழ்ந்த அந்த சம்பவம் தொடர்பான விசாரணை
அறிக்கையில் காணப்படும் குறைபாடுகளை கண்டறியும் நோக்கில்
அமைக்கப்படும். இந்த சிறப்பு செயல்குழுவில் எதிர்க்கட்சியைச் சேர்ந்த
இரு நிபுணர்களுக்கும் இடம் வழங்கப்படும் என்று மந்திரி புசார்
டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
இந்த விவகாரத்தில் எந்த விஷயமும் மூடி மறைக்கப்படாது.
தொழில்நுட்பக் குழு தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ள வேளையில்
அதனை மறு ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவில்
இணைவதற்கு இரு நிபுணர்களின் பெயர்களை வழங்கும்படி
எதிர்க்கட்சியினரை கேட்டுக் கொண்டுள்ளோம் என்று அவர் சொன்னார்.
அந்த அறிக்கை சரியானதா? அல்லது சரி செய்யும் அளவுக்கு
குறைபாடுகளைக் கொண்டுள்ளதா? என்பதை கண்டறிவதற்கும் சம்பவ
இடத்திற்கும் சம்பவத்திற்கும் பொறுப்பானவர்கள் யார் என்பதை
தீர்மானிப்பதற்கும் இந்த மறுஆய்வு உதவும் என்றார் அவர்.
நேற்று மாநில சட்டமன்றத்தில் இந்த சம்பவம் தொடர்பான தீர்மானத்தை
முன்மொழிந்த போது அவர் இதனைத் தெரிவித்தார்.
அந்த விசாரணை அறிக்கையை மாநில அரசு அச்சிடவுள்ளதாகக் கூறிய
அமிருடின், அதனை அச்சிடும் பணி இரு வாரங்களில் முற்றுப்
பெற்றவுடன் அது பாதிக்கப்பட்டவர்களுக்கும சட்டமன்ற
உறுப்பினர்களுக்கும் வழங்கப்படும் என்று அவர் சொன்னார்.
அதிக துறைகள் சம்பந்தப்பட்டுள்ள காரணத்தால் இதன் தொடர்பான
தகவல்களைச் சேகரித்து வருகிறோம். அச்சிடப்படும் பதிப்புகள் ஆர்வம்
உள்ளவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.


