(ஆர்.ராஜா)
ஷா ஆலம், ஜூலை 8 - மத்திய மற்றும் மாநில அரசுகள் மக்களுக்கு வழங்க கூடிய உதவிகளை ஒருங்கிணைக்கும் இ-காசே (e-kasih) தரவு தளத்தில் தோட்டப் பாட்டாளிகளும் இனி பதிந்து கொள்ளலாம்.
தேசிய ஒருமைப்பாட்டு துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமியின் அயரா முயற்சியின் பலனாக இந்த இ-காசே திட்டத்தில் தோட்டத் தொழிலாளர்களும் பதிவு செய்வதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.
இதன் வழி, ஏழை எளிய மற்றும் குறைந்த வருமானம் பெறக் கூடிய தோட்டத் தொழிலாளிகளுக்கு அரசாங்க உதவிகள் கிடைக்க பெறுவதற்கான வாய்ப்பு கிட்டியுள்ளது.
இந்த இ-காசே திட்டத்தில் தோட்டத் தொழிலாளர்கள் பதிந்து கொள்வதற்கு 2007ஆம் ஆண்டு முதல் வாய்ப்பு மறுக்கப்பட்டு வந்தது பாட்டாளி வர்க்கத்திற்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய அநீதியாகும் என சரஸ்வதி கந்தசாமி கூறினார்.
மலேசியாவை செழிப்பான நாடாக உருவெடுக்கச் செய்ததில் தோட்டப் புறங்களில் வாழ்ந்து வரும் இந்திய பாட்டாளி மக்களுக்கு பெரும் பங்கு உண்டு. ஆனால், அரசு உதவிகளை பெறும் விவகாரத்தில் அவர்கள் ஓரங்கட்டப்பட்டது சமூக அநீதியாகவே கருத வேண்டியுள்ளது.
பிரதமர் துறையின் கீழ் இயங்கும் இ-காசே தரவு தளத்திற்கு பொறுப்பேற்க கூடிய ஐ.சி.யூ எனப்படும் அமலாக்க ஒருங்கிணைப்பு பிரிவுடன் கலந்து பேசி இப்பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என அவர் சொன்னார்.
அரசாங்கத்தில் இடம் பெற்றிருக்கும் தலைவர்கள் கிராமங்களை தத்தெடுக்கும் சந்துனி மடாணி (Santuni madani) எனும் திட்டத்தை பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிமுகப்படுத்தியிருந்த நிலையில் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள புக்கிட் தாகார், மேரி ஆகிய தோட்டங்களை தாம் தத்தெடுத்ததாக அவர் கூறினார்.
அவ்விரு தோட்டங்களை சேர்ந்த மக்கள் இ-காசே தரவு தளத்தில் தங்களை பதிவு செய்து கொள்ள அனைத்து முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இவ்விரு தோட்டங்கள் மட்டுமின்றி நாடு முழுவதும் உள்ள தோட்ட மக்களும் இ-காசேவில் பதிவு செய்து கொள்ள தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்துடனும் தாம் கலந்து பேசியதாக அவர் சொன்னார்.
அச்சங்கத்தின் நிர்வாக இயக்குனர் டத்தோ பா.சகாதேவன் இதற்கு முழு ஒத்துழைப்பை வழங்குவதாகக் கூறியுள்ளார்.
மேலும், இதன் தொடர்பில் தோட்டத் துறை மூலப் பொருள் அமைச்சுக்கும் தாம் கடிதம் அனுப்பியுள்ள நிலையில் இதன் தொடர்பில் அமைச்சிடமிருந்து தமக்கு நல்ல பதில் கிடைத்துள்ளது என அவர் குறிப்பிட்டார்.
ஆனால், தேசிய தோட்ட தொழிலாளர் சங்கம் இந்த விவகாரத்தில் ஒத்துழைப்பு வழங்க தொடர்ந்து மறுத்து வருகிறது. தோட்ட மக்களின் நலனுக்காக மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்க அச்சங்கத்தினரை மூன்று முறை பேச்சு வார்த்தைக்கு அழைத்தும் யாரும் கலந்து கொள்ளவில்லை.
இருந்தாலும், நாடு முழுவதும் உள்ள தோட்டப் பாட்டாளி மக்களின் நல்வாழ்விற்காகவும் அவர்களின் சுமைகளை குறைப்பதற்காகவும் தாம் தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருவதாகவும் வெளியிட்ட ஓர் காணொளி பதிவில் துணையமைச்சர் சரஸ்வதி கூறினார்.


