ஷா ஆலம், ஜூலை 8 - இங்குள்ள தாமான் ஸ்ரீ மூடா பகுதியில் ஏற்படும்
வெள்ளத்திற்கு தாங்கள் காரணமல்ல என்ற இண்டா வாட்டர்
கான்சோர்டியம் சென். பெர்ஹாட் நிறுவனத்தின் கூற்றை சிலாங்கூர் அரசு
நிராகரித்துள்ளது.
அங்கு அடிக்கடி ஏற்படும் வெள்ளப் பிரச்சனைக்கு இண்டா வாட்டர்
நிறுவனம் முழு பொறுப்புதாரி அல்ல என்ற போதிலும் அந்நிறுவனத்தின்
மிகவும் பழைமையான கழிவு நீர் உள்கட்டமைப்புகள் அப்பிரச்சனைக்கு
ஒரு வகையில் காரணமாக அமைந்துள்ளன என்று உள்கட்டமைப்பு
மற்றும் விவசாயத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ இஷாம்
ஹஷிம் கூறினார்.
இண்டா வாட்டர் நிறுவனத்தின் மறுப்பு தொடர்பான அறிக்கையை நானும்
படித்தேன். வெள்ளப் பிரச்சனையில் அவர்களுக்கு முழு பொறுப்பு
இல்லாவிட்டாலும் ஒரு வகையில் அவர்களும் காரணமாக உள்ளனர் என்று
அவர் மாநில சட்டமன்றத்தில் இன்று தெரிவித்தார்.
தாமான் ஸ்ரீ மூடாவில் அமைக்கப்பட்டுள்ள இரு கழிவு நீர் சுத்திகரிப்பு
மையங்கள் மிகவும் பழையவை. அவற்றில் ஒன்று நீர் வெளியேற்ற
முறையைக் கொண்டிருக்கவில்லை. மழை நீர் பெய்து கழிவு நீர் குளம்
நிறையும் பட்சத்தில் கழிவு நீர் பெருக்கெடுத்து வெளியே வடியும் என
அவர் சொன்னார்.
மற்றொரு கழிவு நீர் சுத்திகரிப்பு குளத்தில் நீர் வெளியேற்றும் முறை
உள்ளது. எனினும் அது பிரதான வடிகாலின் நீரோட்ட திசைக்கு எதிராக
செயல்படுகிறது. இத்தகைய பிரச்சனைகளுக்கு நாம் தீர்வு காண
வேண்டியுள்ளது என்றார் அவர்.
ஸ்ரீ மூடா வெள்ளப் பிரச்சனைக்கு தாங்களும் பொறுப்பு என்பதை இண்டா வாட்டர் நிறுவனம் அண்மையில் மறுத்திருந்தது குறித்து கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் எஸ். பிரகாஷ் எழுப்பிய துணைக் கேள்விக்கு பதிலளிக்கையில் இஷாம் இவ்வாறு குறிப்பிட்டார்.
ஸ்ரீ மூடாவில் அடிக்கடி ஏற்படும் வெள்ளப் பிரச்சனைக்கு இங்குள்ள இரு
கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்களும் காரணம் என ஷா ஆலம் மாநர்
மன்ற உறுப்பினர் ராமு நடராஜன் அண்மையில் குற்றஞ்சாட்டியிருந்த
நிலையில் அதனை மறுத்து இண்டா வாட்டர் நிறுவனம் கடந்த ஜூன்
25ஆம் தேதி அறிக்கை வெளியிட்டிருந்தது.


