ஷா ஆலம், ஜூலை 8 - இவ்வாண்டு ஜூன் மாதம் வரை ஸ்கிம் கைராட் டாருள் ஏஹ்சான் (கே.டி.இ.) எனப்படும் மரண சகாய நிதித் திட்டத்தின் மூலம் 234 பேரின் வாரிசுகள் தலா 1,000 வெள்ளி உதவித் தொகையைப் பெற்றுள்ளனர்.
இந்த திட்டத்தின் கீழ் 61 முதல் 70 வயது வரையிலானவர்களின் வாரிசுகளே அதிகம் நிதியைப் பெற்றதாகக் கூறிய சமூக நலத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் அன்ஃபால் சாரி, அதற்கு அடுத்த நிலையில் 71 முதல் 80 வயது வரையிலானவர்கள் உள்ளனர் என்றார்.
இவ்வாண்டு தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின் கீழ் 50 வயதுக்கும் மேற்பட்டவர்களும் மாற்றுத் திறனாளிகளும் உதவி பெறத் தகுதி பெற்றுள்ளனர். ஜூன் மாதம் வரை 243 பேரின் வாரிசுகள் இந்த உதவித் தொகையைப் பெற்றனர் என்று அவர் குறிப்பிட்டார்.
நடப்பிலுள்ள மூத்த குடிமக்கள் பரிவுத் திட்டம் (எஸ்.எம்.யு.இ.) மற்றும் இல்திஸாம் சிலாங்கூர் சேஹாட் திட்டங்களில் பங்கு கொண்டவர்களின் பெயர்கள் அவர்களின் ஒப்புதலின் பேரில் இந்த மரண சகாய நிதித் திட்டத்தில் இயல்பாக சேர்த்துக் கொள்ளப்படும் என்றார் அவர்.
இந்த திட்டத்தின் அமலாக்கத்திற்கு மாநில அரசு இவ்வாண்டு 2 கோடி வெள்ளியை ஒதுக்கியுள்ளது. இத்திட்டத்தின் வழி 20,000 பேர் பயனடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது என்று அவர் மாநில சட்டமன்றத்தில் இன்று தெரிவித்தார்.
மூத்த குடிமக்களுக்கான இந்த மரண சகாய நிதி கடந்த 2019ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. பின்னர் இத்திட்டம் நிறுத்தப்பட்டு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.


