ஷா ஆலம், ஜூலை 8 - வெளிநாட்டு வர்த்தகர்கள் தொடர்பில் நடப்பில்
இருக்கும் வழிகாட்டிகளை மாநில அரசு மறு ஆய்வு செய்யவிருக்கிறது.
வெளிநாட்டு வர்த்தகர்களின் வருகையால் உள்நாட்டு வர்த்தக
முதலீட்டுச் சந்தைக்கு பாதிப்பு ஏற்படாமலிருப்பதை உறுதி செய்ய
இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக ஊராட்சி மன்றங்களுக்கான ஆட்சிக்குழு
உறுப்பினர் டத்தோ இங் சுயி லிம் கூறினார்.
கருத்துகள் மற்றும் உள்ளீடுகளைப் பெறுவதற்காக வர்த்தக சங்கங்களுடன்
விரைவில் சந்திப்பு நடத்தப்படும் என்று அவர் சொன்னார்.
இந்த சந்திப்பின் போது நடப்பிலுள்ள வழிகாட்டிகளை ஆய்வு செய்வோம்.
முதலீட்டு வர்த்தகங்கள் உள்நாட்டு சந்தைக்கு பாதிப்பு ஏற்படாமலிருப்பதை
உறுதி செய்யும் வகையில் கூடுதல் நிபந்தனைகளை சேர்ப்பதா என்பது
குறித்தும் முடிவெடுக்கப்படும் என்றார் அவர்.
எனினும், உள்நாட்டு வர்த்தகர்களுக்கு உதவுவதற்காகக் குறிப்பாக, மேலும்
பெரிய அளவிலான சந்தையில் நுழைவதற்காக சமூக ஊடகப் பயிற்சி
உள்பட பல்வேறு பயிற்சிகள் மற்றும் திட்டங்களை சிறு வணிர்களுக்கு
அமல்படுத்தி வருகிறோம் என அவர் சொன்னார்.
சுற்றுப்பயணிகளாக வரும் வெளிநாட்டினர் தங்கள் வருகை அனுமதியைப் தவறாகப் பயன்படுத்தி வர்த்தகத்தில் ஈடுபடுவது குறித்து மாநில சட்டமன்றத்தில் இன்று ரவாங் உறுப்பினர் சுவா வேய் கியாட் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
முன்னதாக, மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியில் அந்நிய முதலீடு ஊக்குவிப்பும் உள்நாட்டு வர்த்தக சூழலும் சமநிலையாக இருப்பதை உறுதி செய்யும் கடப்பாட்டை அரசாங்கம் கொண்டுள்ளதாக இங் கூறினார்.


