ஹாமில்டன் (கனடா), ஜூலை 8 - காஸா பகுதியில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் பெருமளவிலான கட்டாய இடம்பெயர்வு குறித்து ஐக்கிய நாடுகள் சபை (ஐ.நா.) நேற்று கவலை தெரிவித்தது.
கடந்த மார்ச் மாதத்தில் போர் நிறுத்தம் முடிவுக்கு வந்தது முதல் இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கைகள் காரணமாக 700,000 க்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர் என அந்த உலக அமைப்பு கூறியதாக அனடோலு ஏஜென்சி கூறியது.
கடந்த இரண்டு நாட்களில் இரண்டாவது முறையாக கான் யூனிஸ் வட்டாரத்தின் சில பகுதிகளில் இஸ்ரேலிய அதிகாரிகள் கட்டாய வெளியேற்ற உத்தரவை பிறப்பித்தனர். வெளியேற்ற திட்டமிடப்பட்ட பகுதியில் 50,000க்கும் மேற்பட்டோர் இருப்பதாக எங்கள் சகாக்கள் மதிப்பிட்டுள்ளனர் என்று ஐ.நா. செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
கடந்த மார்ச் மாதத்தில் போர் நிறுத்தம் முடிவடைந்ததிலிருந்து காஸாவில் 700,000 க்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். அவர்களில் பலர் ஒன்றுக்கு மேற்பட்ட முறை இடம் பெயர்ந்துள்ளனர். மேலும் அவர்களுக்குச் செல்வதற்கு பாதுகாப்பான இடம் என்று எதுவும் இல்லை என்பதை நாங்கள் உங்களுக்கு நினைவூட்டுகிறோம் என அவர் குறிப்பிட்டார்.
வார இறுதியில் உணவு பெற முயன்றபோது பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது என்று கூறிய டுஜாரிக், மருத்துவமனைகள் இப்போது காயமடைந்த நோயாளிகளால் "நிரம்பி வழிகின்றன" என்றார்.
அனைத்து பொதுமக்களுக்கு எதிரான படுகொலையை நாங்கள் மீண்டும் சந்தேகத்திற்கு இடமின்றி கண்டிக்கிறோம். காஸாவில் மூன்றில் ஒருவர் பல நாட்களாக சாப்பிடாமல் இருப்பதால் இன்னும் பலர் பட்டினியால் வாடும் அபாயத்தில் உள்ளனர் என்று கூறிய உலக உணவுத் திட்ட அறிக்கையை மேற்கோள் காட்டி அவர் குறிப்பிட்டார்.
தொடர்ச்சியாக நான்காவது மாதமாக இஸ்ரேலிய அதிகாரிகள் காஸாவிற்குள் எந்த எரிபொருள் விநியோகத்தையும் அனுமதிக்கவில்லை. பிராந்தியத்தில் உதவி விநியோகத்தை எளிதாக்க அனைத்து வழிகளையும் திறக்க இஸ்ரேலை அவர் வலியுறுத்தினார்.


