வாஷிங்டன், ஜூலை 8 - எதிர்வரும் ஆகஸ்ட் 1 முதல் மலேசியாவுக்கு 25 விழுக்காடு இறக்குமதி வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு எழுதியுள்ள அதிகாரப்பூர்வக் கடிதத்தில் அதனை அவர் குறிப்பிட்டார்.
சில நாடுகளின் நியாயமற்ற வாணிப நடைமுறைகளிலிருந்து 'அமெரிக்கத் தொழில்துறையை பாதுகாக்க அந்நடவடிக்கை அவசியம் என அவர் கூறினார்.
அமெரிக்காவை மற்ற நாடுகள் பயன்படுத்திகொள்வதை இனியும் அனுமதிக்க முடியாது என்றார் அவர்.
மேலும், உலகின் "முதல் சந்தை" என்று ட்ரம்ப் விவரித்த அமெரிக்கப் பொருளாதாரத்தில் மலேசியாவின் அதிக பங்களிப்பையும் ஊக்குவித்தார்.
மலேசியாவைப் போன்றே 25 விழுக்காடு இறக்குமதி வரி விதிக்கப்பட்ட நாடுகளில் ஜப்பான், தென் கொரியா, துனிசியா, கசக்ஸ்தான் உள்ளிட்டவை அடங்கும்.
தென்னாப்பிரிக்கா, வங்காளதேசம் போன்ற நாடுகளுக்கு 30 விழுக்காடும், லாவோஸ், மியன்மார் நாடுகளுக்கு 40 விழுக்காடு வரையிலும் இறக்குமதி வரி விதிக்கப்பட்டுள்ளது.


