ரியோ டி ஜெனிரோ, ஜூலை 8 - பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் இத்தாலி, பிரான்ஸ் மற்றும் பிரேசில் ஆகிய மூன்று நாடுகளுக்கான அதிகாரப்பூர்வப் பயணம் இலக்கிடப்பட்ட நோக்கங்களை அடைவதில் வெற்றி கண்டுள்ளது.
இப்பயணம் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் முதலீட்டை ஈர்ப்பதற்கும் மலேசியாவின் வர்த்தகத்தை அதிகரிப்பதற்கும் புதிய வாய்ப்புகளைத் திறந்துள்ளது என்று அன்வார் கூறினார்.
கடந்த ஜூலை 1 ஆம் தேதி இத்தாலியில் தொடங்கிய பயணம் ஆசியான் தலைவராக மலேசியாவின் நிலையை அதிகரிப்பதிலும் வெற்றி பெற்றது என்று அவர் சொன்னார்.
இம்மாதம் முதல் தேதி தொடங்கி மேற்கொள்ளப்பட்ட இத்தாலி, பிரான்ஸ் மற்றும் பிரேசிலுக்கான தனது அதிகாரப்பூர்வப் பயணத்தின் முடிவில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் இதனைக் கூறினார்.
இந்த தொடர் பயணம் மலேசிய நிறுவனங்கள் அனைத்துலகச் சந்தைகளில் தங்கள் நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்கான பரந்த வலையமைப்பைத் திறந்துவிட்டன என்றும் அவர் தெரிவித்தார்.
இத்தாலிக்கு மூன்று நாள் பணி நிமித்தப் பயணத்தின் விளைவாக மொத்தம் 800 கோடி வெள்ளிக்கும் அதிகமான சாத்தியமான முதலீடுகள் வெற்றிகரமாக உருவாக்கப்பட்டன. அதே நேரத்தில் பிரான்சிலில் சாத்தியமான முதலீட்டு மதிப்பு சுமார் 400 கோடி வெள்ளி என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பயணத்தின் போது பிரதமருடன், வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் ஹசான், போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக், விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் சாபு, பாதுகாப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது காலிட் நோர்டின் மற்றும் முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் டெங்கு ஜஃப்ருல் ஆகிய ஐந்து அமைச்சர்களும் பங்கேற்றனர்.
பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியின் அழைப்பின் பேரில் அன்வார் மேற்கொண்ட இத்தாலிக்கான அதிகாரப்பூர்வப் பயணம் பல்வேறு விவேகப் பங்காளித்துவத் துறைகளில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.
முதலீடு மற்றும் வர்த்தகத்தில் கவனம் செலுத்துவதோடு மட்டுமல்லாமல், நிதியமைச்சராகவும் இருக்கும் அன்வார் அந்நாடுகளின் தலைவர்களுடன் புவிசார் அரசியல் பிரச்சனைகள் குறித்தும் விவாதித்தார்.


