கோலாலம்பூர், ஜூலை 8 - இரு மாதங்களுக்கு முன்னர் செந்தூலில் நடந்த தெரு சண்டையில் ஆடவர் ஒருவரைக் படுகொலை செய்ததாகப் பாதுகாவலர் ஒருவர் மீது இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நேற்று குற்றம் சாட்டப்பட்டது.
மாஜிஸ்திரேட் எம்.எஸ். அருண்ஜோதி முன் தனக்கெதிராகக் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது அதனை புரிந்துகொண்டதற்கு அடையாளமாக 39 வயதான கே. நாகேந்திரா தலையசைத்தார். எனினும், இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்குள் வருவதால் குற்றஞ்சாட்டப்பட்டவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படவில்லை.
கடந்த மே 25 ஆம் தேதி இரவு 9.23 மணிக்கு செந்தூலில் உள்ள தாமான் இந்தான் பைடூரியில் சாலையோரம் 44 வயதான கே. குமரனைக் கொலை செய்ததாக நாகேந்திரா மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் கட்டாய மரண தண்டனை அல்லது 30 முதல் 40 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் குறைந்தபட்சம் 12 பிரம்படிகள் விதிக்க வகை செய்யும் தண்டனைச் சட்டப் பிரிவு 302வது கீழ் அவ்வாடவர் குற்றச்சாடடை எதிர்நோக்கியுள்ளார்.
பிரேதப் பரிசோதனை அறிக்கையைப் பெறுவதற்காக இந்த வழக்கை செப்டம்பர் 10ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.


