NATIONAL

ஷா ஆலம் உலக சமாதான ஆலயத்தின் ஏற்பாட்டில் அனைத்துலக யோகா தினம்- எமரால்டு தமிழ்ப்பள்ளியில் நடைபெற்றது

7 ஜூலை 2025, 9:46 AM
ஷா ஆலம் உலக சமாதான ஆலயத்தின் ஏற்பாட்டில் அனைத்துலக யோகா தினம்- எமரால்டு தமிழ்ப்பள்ளியில் நடைபெற்றது

ஷா ஆலம், ஜூலை 7 - அனைத்துலக யோகா தினத்தை முன்னிட்டு ஷா ஆலம் உலக சமாதான ஆலயத்தின் ஏற்பாட்டில் அனைத்துலக யோகா தினம் இங்குள்ள எமரால்டு  தமிழ்ப்பள்ளியில் அண்மையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

கோப்பியோ அமைப்பின் அனைத்துலக செயலகத்தின் பொதுச் செயலாளர் ரவீந்திரன் அர்ஜூனன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சுமார் 80 பேர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் சிறப்பு பிரமுகராக ஷா ஆலம் மாநகர் மன்ற உறுப்பினர் ராமு நடராஜன் கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய ரவீந்திரன், ஒவ்வோரு ஆண்டும் ஜூன் மாதம்  21ஆம் தேதி அனுசரிக்கப்படும் அனைத்துலக யோகா தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள தமிழ்ப்பள்ளிகளில் கோப்பியோ அமைப்பின் வாயிலாக யோகா தொடர்பான பல்வேறு நிகழ்வுகளை தாங்கள் நடத்தி வருவதாகக் கூறினார்.

யோகாசனம் பற்றிய புரிதலை இளம் பிராயத்தினர் மத்தியில்  ஏற்படுத்துவது மற்றும் அதனை ஒரு பயிற்சியாகக் கடைபிடிக்க அவர்களை ஊக்குவிப்பது  ஆகிய நோக்கங்களின் அடிப்படையில் இந்நிகழ்வுக்கு தாங்கள் ஏற்பாடு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்த யோகாசனக் கலையை தமிழ்பள்ளிகளில் அறிமுகப்படுத்தும் முயற்சியில் நாங்கள்  தீவிரமாக ஈடுப்பட்டு வருகிறோம். கடந்தாண்டு 200 பள்ளிகளில் யோகாவை அறிமுகப்படுத்தினோம். இவ்வாண்டு அந்த எண்ணிக்கை 250 பள்ளிகளாக உயர்ந்துள்ளது. எதிர்வரும் 2029ஆம் ஆண்டிற்குள் இந்த திட்டத்தை அனைத்து தமிழ்ப்பள்ளிகளிலும் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம் என அவர் குறிப்பிட்டார்.

இந்தியத் தூதரகத்தின் ஆதரவைடன் நடத்தப்படும் இந்த திட்டத்திற்கு யோகா கலையில் தேர்ச்சி பெற்ற பயிற்றுநர்கள் முழு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர் என்று அவர் சொன்னார்.

இந்நிகழ்வில் பேசிய ஷா ஆலம் மாநகர் மன்ற உறுப்பினர்  ராமு நடராஜன்,  ஷா ஆலம் உலக சமாதான ஆலயத்துடன் இணைந்து மாநகர் மன்றத்தின் ஒன்பதாவது மண்டலம்  இரண்டாவது ஆண்டாக இந்நிகழ்வை நடத்துவதாக சொன்னார்.

யோகா கலை  இந்தியாவில் தோன்றினாலூம் அதன் முக்கியத்துவம் காரணமாக இந்த கலை இன்று உலகம் முழுவதும் வியாபித்துள்ளது என அவர் குறிப்பிட்டார்.

உலக சமாதான ஆலயத்தின் ஷா ஆலம் கிளையின் செயலாளரான ராஜாமணி கூறுகையில், முதுமையான காலத்திலும் இளமையாகவும் சுறுசுறுப்புடனும்  இருப்பதற்கு  யோகா அருமருந்தாக விளங்குவதால் அக்கலையை மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் நோக்கில் தாங்கள் இந்த யோகா தினத்தை ஒவ்வோராண்டும் நடத்தி வருவதாகக் கூறினார்.

கோப்பியோ, இந்தியத் தூதரகம்  ஆகிய அமைப்புகளின் ஒத்துழைப்பு மற்றும் ஆதரவு  மூலம் இந்த கலையை சமூகத்தின் அனைத்து தரப்பினர் மத்தியில் கொண்டு செல்லும் முயற்சியில் தாங்கள் தீவிரமாக ஈடுப்படு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.