(ஆர்.ராஜா)
ஷா ஆலம், ஜூலை 7- கோத்தா டாமன்சாரா தொகுதி இந்திய சமூகத்
தலைவரின் ஏற்பாட்டில் மகளிருக்கான நக அலங்காரப் பயிற்சிப் பட்டறை
மற்றும் அன்னையர் தின விழா நேற்று இங்குள்ள செக்சன் யு5,
மத்தாஹாரி சுபாங் பெஸ்தாரி மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
கோத்தா டாமன்சாரா சட்டமன்றத் தொகுதி சேவை மையம், ஷா ஆலம்
மாநகர் மன்றத்தின் 18வது பிரிவு ஆகியவற்றின் ஒத்துழைப்புடன்
நடத்தப்பட்ட இந்த நிகழ்வில் 35 மகளிர் கலந்து கொண்டதாகக் கோத்தா
டாமன்சாரா தொகுதி இந்திய சமூகத் தலைவர் திருமதி எம்.தேவி
கூறினார்.
பெண்கள் கைத்தொழிலைக் கற்று அதன் மூலம் உபரி வருமானம்
பெறுவதை ஊக்குவிக்கும் நோக்கிலும் அன்னையர் தினத்தைக்
கொண்டாடும் வகையிலும் நடத்தப்பட்ட இந்த நிகழ்வுக்கு தொகுதி
சட்டமன்ற உறுப்பினர் முகமது இஸுவான் காசிம் தலைமை தாங்கி
பயிற்சியில் பங்கு கொண்டவர்களுக்கு சான்றிதழை வழங்கியதாக அவர்
சொன்னார்.
இந்த நக அலங்காரப் பயிற்சியில் பங்கு கொள்வதற்கு கோத்தா
டாமன்சாரா தொகுதியிலுள்ள வாக்காளர்களுக்கு மட்டுமே முன்னுரிமை
வழங்கினோம். இந்த நிகழ்வில் உரையாற்றிய இஸுவான் காசிம்,
பெண்கள் பகுதி நேரமாக தொழில் செய்து உபரி வருமானம் ஈட்டுவதற்கு
இத்தகைய பயிற்சிகள் பெரிதும் துணைபுரியும் எனக் கூறினார்.
மக்களுக்கு பயன் தரும் வகையிலான நிகழ்வுகளை நடத்தி வரும் இந்திய
சமூகத் தலைவர் தேவி மற்றும் அவர் தம் குழுவினருக்கு அவர்
பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டார்.


