பெட்டாலிங் ஜெயா, ஜூலை 7: பிரேசிலில் நேற்று நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் போது நடந்த சந்திப்பில், மலேசியாவில் இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி) வளாகத்தை நிறுவுவதற்கான திட்டம் குறித்து பிரதமர் அன்வார் இப்ராஹிமும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் விவாதித்தனர்.
ஐஐடி இந்தியாவின் சிறந்த பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் ஆகும். அந்நிறுவனம் மிகவும் திறமையான பட்டதாரிகளை உருவாக்குவதற்கும் புதுமைகளை வளர்ப்பதற்கும் பெயர் பெற்றவை. உலக அளவிலும் முன்னணி பொறியியல் கல்லூரிகளில் ஒன்றாக அது கருதப்படுகிறது.
முன்மொழியப்பட்ட ஐஐடி வளாகம் உட்பட கலாச்சார, சுற்றுலா மற்றும் கல்வி பரிமாற்றங்கள் மூலம் மக்களிடையேயான உறவுகளை மேம்படுத்துவது குறித்தும் அன்வாரும் மோடியும் விவாதித்தனர்.
மேலும், வாணிபம், முதலீடு, டிஜிட்டல் தொழில்நுட்பம், தற்காப்பு உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை விரிவுப்படுத்தும் சாத்தியத்தையும் அவர்கள் விவாதித்தனர்.
பாலஸ்தீனம், ஜம்மு - காஷ்மீர் போன்ற அனைத்துலக விவகாரங்களில் அமைதியான முறையில் தீர்வு காணப்பட வேண்டும் என்பதையும் அன்வாரும் மோடியும் வலியுறுத்தினர்.


