அலோர்ஸ்டார், ஜூலை 7- கடந்த சனிக்கிழமை முதல் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அறுவர் ஜித்ரா, கோரோக் ஆற்றின் மூழ்கிய காரில் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டனர்.
ஒரு ஆடவர், ஒரு பெண்மணி, மூன்று சிறார்கள் மற்றும் ஒரு கைக்குழந்தை ஆகியோரே இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டதாகக் கெடா மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் முதலாவது மண்டலத்தின் உயர் ஆணையர் 1, அகமது அமினுடின் அப்துல் ரஹிம் கூறினார்.
இந்த சம்பவம் தொடர்பில் பொது மக்களிடமிருந்து இன்று காலை 8.30 மணியளவில் தாங்கள் தகவலைப் பெற்றதாக அவர் சொன்னார்.
புரோட்டோன் ஈஸ்வரா கார் ஒன்று ஆற்றில் கிடப்பதாகவும் அதில் இரு பெரியவர்கள், மூன்று சிறார்கள் மற்றும் ஒரு குழந்தை இறந்த நிலையில் காணப்படுவதாகவும் எங்களிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
இறந்தவர்களின் உடல்களை அவர்களின் உறவினர்கள் அடையாளம் காட்டிய வேளையில் உடல்களை மீட்கும் பணி தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
ஆறு மாதக் குழந்தை உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அறுவர் கடந்த சனிக்கிழமை முதல் காணாமல் போன சம்பவம் குறித்து நேற்று பெர்னாமா செய்தி வெளியிட்டிருந்தது.
ஜித்ரா, தாமான் அமானில் உள்ள உறவினர் வீட்டில் இரவைக் கழித்த அந்த அறுவரும் ஜெர்லுனில் உள்ள தங்கள் வீட்டிற்கு திரும்பவில்லை எனக் கூறப்பட்டது.


