கிள்ளான், ஜூலை 7- சிலாங்கூர் மாநிலத்தில் பிளாஸ்டிக் பை
பயன்பாட்டிற்கு முற்றாக தடை விதிப்பது தொடர்பான சட்டத்தை
வரைவது மற்றும் இறுதி செய்வது தொடர்பான பணிகளை மேற்கொள்ள
பல பட்டறைகளை மாநில அரசு தொடர்ந்து நடத்தவிருக்கிறது.
இந்த விரிவான சட்ட உருவாக்கத்தில் பிளாஸ்டிக் பைகளைப்
பயன்படுத்துவோருக்கு விதிக்கப்படும் கட்டணம் மற்றும் பிளாஸ்டிக்
பயன்பாடு இல்லா தினத்தை நிர்ணயிப்பது போன்ற அம்சங்களும்
கவனத்தில் கொள்ளப்படும் என்று சுற்றுச்சூழல் துறைக்கான ஆட்சிக்குழு
உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் கூறினார்.
வாரத்தின் ஒரு நாளை பிளாஸ்டிக் பைகளின் பயனீட்டிற்கு முற்றாக தடை
விதிக்கும் தினமாக நாம் அறிவிப்பதற்கான சாத்தியம் உள்ளது. மேலும்,
வழக்கமான நாட்களில் பிளாஸ்டிக் பைகளுக்கு விதிக்கப்படும்
கட்டணத்தை சற்று உயர்த்துவது குறித்தும் பரிசீலிக்கப்படுகிறது என்று
அவர் சொன்னார்.
நேற்று இங்குள்ள லாமான் செனி சஃபாரியில் பிளாஸ்டிக் இல்லா
இயக்கத்தின் இரண்டாம் தொடர் பிரச்சாரத்தை தொடக்கி வைத்தப் பின்னர்
செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
பிளாஸ்டிக் பை பயனீட்டிற்கு எதிராக சட்டத்தை உருவாக்குவது
தொடர்பில் சட்ட ஆலோசகர், ஊராட்சி மன்றங்கள், மாநில அரசு
துறைகளை உள்ளடக்கிய கலந்துரையாடல்கள் தொடர்ந்து நடைபெற்று
வருகின்றன என்று அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே, பிளாஸ்டிக் பயன்பாடு இல்லா பிரச்சார இயக்கத்தின் இரண்டு
தொடர்களுக்கு பொதுமக்களிடமிருந்து கிடைத்த ஆதரவு பெரிதும்
வரவேற்கத்தக்கதாக இருந்ததாக ஜமாலியா சொன்னார்.
முதலாவது இயக்கம் கடந்த மே மாதம் 24ஆம் தேதி பாகான் லாலாங்
கடற்கரையில் நடைபெற்றது. இந்த பிரச்சார இயக்கத்தில் பல்வேறு
துறைகளும் அரசு நிறுவனங்களும் பங்கு கொண்டது இதன் சிறப்பம்சமாக
உள்ளது என அவர் குறிப்பிட்டார்.


