(ஆர்.ராஜா)
ஷா ஆலம், ஜூலை 7- கடந்தாண்டு எஸ்.பி.எம். தேர்வில் சிறப்பாகத் தேறிய மாணவர்களை சிறப்பிக்கும் நிகழ்வு கோத்தா கெமுனிங் சட்டமன்றத் தொகுதி ஏற்பாட்டில் நேற்று சிறப்பாக நடைபெற்றது. கோத்தா கெமுனிங் டேவான் தாய்னியாவில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன் தலைமை தாங்கினார்.
கடந்த 2024 ஆம் ஆண்டு எஸ்.பி.எம். தேர்வில் சிறப்பான அடைவு நிலையை அதாவது 8ஏ முதல் 12ஏ வரை பெற்ற கோத்தா கெமுனிங் தொகுதியைச் சேர்ந்த 159 மாணவர்கள் இந்நிகழ்வில் ரொக்கப் பரிசு வழங்கி கெளரவிக்கப்பட்டனர். இந்த பாராட்டு நிகழ்வுக்காக தொகுதி மொத்தம் 38,400 வெள்ளியை ஒதுக்கீடு செய்திருந்தது.
எஸ்.பி.எம். தேர்வில் 12ஏ பெற்ற ஒரு மாணவருக்கு வெ 400 வழங்கப்பட்ட வேளையில் 11ஏ பெற்ற 6 மாணவர்கள் தலா 350 வெள்ளியும் 10ஏ பெற்ற 22 மாணவர்கள் தலா 300 வெள்ளியும் 9ஏ பெற்ற 66 மாணவர்கள் தலா 250 வெள்ளியும் 8ஏ பெற்ற 64 மாணவர்கள் தலா 200 வெள்ளியும் பெற்றனர்.
மாணவர்களின் சாதனைகளைக் கொண்டாடும் அதேவேளையில் அவர்களின் கல்விப் பயணம் நெடுகிலும் உடனிருந்து சற்றும் சோர்வடையாது ஆதரித்த ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் முக்கிய பங்கைப் பாராட்டும் நோக்கிலும் இந்நிகழ்வு நடத்தப்பட்டதாக பிரகாஷ் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய அவர், கல்வி என்பது தேர்வில் சிறப்பான அடைவு நிலையைப் பதிவு செய்வதை மட்டும் இலக்காகக் கொண்டதல்ல. மாறாக, முற்போக்கான மற்றும் போட்டித் திறன் வாய்ந்த தேசத்தின் உருவாக்கத்திற்கான அடித்தளமாகவும் விளங்குகிறது என்று சொன்னார்.
நீங்கள் அனைவரும் எதிர்காலத்தின் தலைவர்களாக இருப்பீர்கள் என்று நான் உண்மையிலேயே நம்புகிறேன். உங்கள் திறனை ஒரு போதும் சந்தேகிக்காதீர்கள். எஸ்.பி.எம். வெற்றி என்பது ஒரு ஆரம்பம் மட்டுமே. நீங்கள் தொடர்ந்து முயற்சித்தால், கனவு காணும் எதையும் நீங்கள் அடையலாம் என்றார் அவர்.
கோத்தா கெமுனிங் மாநில சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விழாவில் சிலாங்கூர் மாநில கல்வி இலாகாவின் கற்றல் துறையின் மூத்த உதவி இயக்குநர் அசிலாவதி பிந்தி அபு பக்கார், ஷா ஆலம் மாநகர் மன்ற உறுப்பினர்கள், கிராமத் தலைவர்கள் மற்றும் இந்திய சமூகத் தலைவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.


