கோலாலம்பூர், ஜூலை 7- வர்த்தக வாகனங்கள் விபத்தில் சிக்கும் பட்சத்தில் அதன் தொடர்பான விசாரணை முடியும் வரை சம்பந்தப்பட்ட ஓட்டுநர்களின் சரக்கு அல்லது பொது போக்குவரத்து வாகன லைசென்ஸ் தற்காலிகமாக முடக்கப்படும்.
விபத்து தொடர்பான விசாரணையில் ஓட்டுநர் குற்றம் செய்தது நிரூபிக்கபட்டால் அவரது பொது போக்குவரத்து வாகன லைசென்ஸ் (பி.எஸ்.வி.) அல்லது சரக்கு வாகன லைசென்ஸ் (ஜி.டி.எல்.) முழுமையாக ரத்து செய்யப்படும் என்று ஜே.பி.ஜே. தலைமை இயக்குநர் டத்தோ ஏடி ஃபாட்லி ரம்லி கூறினார்.
வர்த்தக வாகன ஓட்டுநர்கள் பொறுப்புணர்வுடன் செயல்படுவதை உறுதி செய்யும் நோக்கில் இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாகக் கூறிய அவர், தங்களின் லைசென்சை முடக்கத்திலிருந்து அல்லது கருப்பு பட்டியலிருந்து நீக்க விரும்பினால் அவர்கள் மறுபடியும் பயிற்சித் திட்டத்தில் பங்கு கொண்டு தேர்ச்சி பெற வேண்டும் என்றார்.
இந்த மறு பயிற்சித் திட்டத்தை பின்னர் அறிவிக்கப்படும் ஒரு இடத்தில் .ஜே.பி.ஜே. நடத்தும். அந்த பயிற்சிக்கு உண்டாகும் செலவினை சம்பந்தப்பட்ட ஓட்டுநர் ஏற்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.
நேற்று இங்கு கோலாலம்பூர் நிலையிலான மைலைசென்ஸ் பி2 திட்டத்தின் கீழ் வாகனமோட்டும் லைசென்ஸ்களை ஒப்படைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.
விபத்தில் சிக்கும் சரக்கு வாகன ஒட்டுநர்களின் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் திட்டத்தை தாங்கள் ஏற்கனவே தொடங்கி விட்டோம். இதுவரை ஐந்து ஓட்டுநர்களின் லைசென்ஸ்கள் முடக்கப்பட்டுளன என்றார் அவர்.
சம்பந்தப்பட்ட வாகனமோட்டி குற்றம் இழைக்கவில்லை என்பது போலீஸ் விசாரணையில் கண்டறியப்பட்டால் அந்த தற்காலிக தடையை நீக்குவதற்கான நடவடிக்கையை ஜே.பி.ஜே. மேற்கொள்ளும் என்று அவர் சொன்னார்.


