கிள்ளான், ஜூலை 5- கிள்ளான் தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனைக்கு இரத்தத்தை தானமாக பெற 700 பைகள் இரத்தத்தை சேகரிக்கும் முயற்சியில் அரச கிள்ளான் மாநகர் மன்றம் (எம்.பி.டி.கே.) 99 ஸ்பீட்மார்ட் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுகிறது.
நோயாளிகளின் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக அனைத்து இரத்த வகைகளையும் உள்ளடக்கிய 3,000 பைகளை மாதந்தோறும் வழங்குவதன் மூலம் சீரான இரத்த விநியோகத்தை மருத்துவமனைக்கு வழங்குவதே இந்த முயற்சியின் நோக்கமாகும் என்று கிள்ளான் டத்தோ பண்டார் டத்தோ அப்துல் ஹமீட் ஹுசைன் கூறினார்.
இந்த முயற்சி ஒரு உயிர்காக்கும் பணி என்பதால் தொடர்ந்து இடைவிடாமல் தொடர்ந்து நடைபெற வேண்டும். கடந்தாண்டு 620 பைகளுக்கு மேல் என்ற இரத்த தான இலக்கை வெற்றிகரமாக தாண்டியதைத் தொடர்ந்து, 99 ஸ்பீட்மார்ட் ஏற்பாடு செய்யும் இரண்டாவது இரத்த தான முகாம் இதுவாகும்.
கிள்ளான் மருத்துவமனையில் இரத்த விநியோகம் சீராக இருந்தாலும், ஒவ்வொரு பையும் 40 நாட்களில் பயன்படுத்தும் தேதி காலாவதியாகிவிடும் என்பதால் இவ்விவகாரத்தில் மெத்தனத்திற்கு இடமில்லை என்று மாநகர் மன்றம் கருதுகிறது.
ஆகவே, தொடர்ச்சியான தான முயற்சிகள் அவசியம் என்று இன்று இங்கு இரத்த தான பிரச்சாரத்தைத் தொடக்கி வைத்தப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறினார். இந்த நிகழ்வில் 99 ஸ்பீட்மார்ட்டின் தலைமை செயல் அதிகாரி யோங் எங் குவாங் கலந்து கொண்டார்.
இதற்கிடையில், 700 பைகள் சேகரிக்கும் இலக்கை இன்று பிற்பகல் 3 மணிக்குள் அடைய திட்டமிடப் பட்டுள்ளதாகவும், பெரும்பாலான நன்கொடையாளர்கள் கிள்ளானைத் தளமாகக் கொண்ட 99 ஸ்பீட்மார்ட் ஊழியர்களாக இருப்பதாகவும் யோங் தெரிவித்தார்.
99 ஸ்பீட்மார்ட் ரிறுவனத்தில் நாடு முழுவதும் 25,000 ஊழியர்கள் உள்ளனர். அவர்களில் 8,000 பேர் கிள்ளானைச் சுற்றியுள்ள கிளைகளில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.


