பாரிஸ், ஜூலை 5- காஸாவில் போர் நிறுத்தம் அமல் செய்யப்படுவதற்கும் பாலஸ்தீனர்களுக்கு மனிதாபிமான உதவிகள் கிடைப்பதற்குமான தங்களின் நிலைப்பாட்டை மலேசியாவும் பிரான்ஸூம் மறு உறுதிப்படுத்தியுள்ளன.
இங்குள்ள எலிஸி மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமும் பிரான்ஸ் அதிபர் இமெனுவல் மெக்ரோனும் இந்த கோரிக்கையை விடுத்தனர்.
காஸாவில் நிரந்தரப் போர் நிறுத்தம் அமல் செய்யப்பட வேண்டும் என்பதோடு பிணைக் கைதிகளும் விடுவிக்கப்பட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.
காஸா விவகாரத்திற்கு இரு நாட்டு தீர்வு சரியான நடவடிக்கையாக அமையும் என்று அதிபர் மெக்ரோன் தெரிவித்தார்.
இவ்விவகாரம் தொடர்பில் சவூதி அரேபியா உள்ளிட்ட தரப்பினருடன் நாங்கள் இணைந்து செயல்பட்டு வருகிறோம். தற்போதைக்கு, உதவிகள் காஸாவுக்குள் நுழைய இஸ்ரேல் அனுமதிக்க வேண்டும் என்று அவர் சொன்னார்.
இரு தரப்பு சந்திப்பு நடைபெறுவதற்கு முன்னர் நடத்தப்பட்ட இந்த செய்தியாளர் சந்நதிப்பில் பேசிய அன்வார், காஸா நெருக்கடிக்கு தீர்வு காண்பதில் மெக்ரோன் ஆற்றி வரும் பணிகளை பாராட்டினார்.
சிவிலியன்கள், பெண்கள் மற்றும் சிறார்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்படும் கொடூரங்கள் மற்றும் குண்டு வீச்சுத் தாக்குதல்களை நாங்கள் கண்டிக்கிறோம். இந்த பிரச்சினைக்கு அனைத்துலக சமூகத்தால் தீர்வு காண இயலாதது மிகவும் வெட்கக் கேடானது என்று அவர் வர்ணித்தார்.
ஈரான் மீதான் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பையும் மலேசிய கண்டிப்பதாக கூறிய அன்வார், மத்திய கிழக்கில் அமைதியை நிலைநாட்டுவதற்கு பிரான்ஸ் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு மலேசியாவின் ஆதரவு எப்போதும் உண்டு என அவர் குறிப்பிட்டார்.


