கோலாலம்பூர், ஜூலை 5- தற்போது 85 விழுக்காடு முன்னேற்றத்தை எட்டியுள்ள
கிழக்கு கடற்கரை ரயில் இணைப்பு (இ.சி.ஆர்.எல்.) திட்டத்தின் அமலாக்கத்தை அணுக்கமாக கண்காணிக்கும்படி மலேசிய ரயில் லிங்க் சென். பெர்ஹாட் நிறுவனம் (எம்.ஆர்.எல்.) கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மலாக்காவில் நேற்று தொடங்கிய 32வது எம்.ஆர்.எல். இயக்குநர்கள் வாரியக் குழு கூட்டத்தில் கலந்து கொண்டபோது அரசாங்கத் தலைமைச் செயலாளர் டான் ஸ்ரீ ஷம்சுல் அஸ்ரி அபு பக்கர் இதனைத் தெரிவித்தார்.
வரும் 2027 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் பயணச் சேவையில் தாமதத்தை ஏற்படுத்தக்கூடிய பொறுப்பற்ற தரப்பினரின் ரயில் அத்துமீறல் உட்பட எந்தவொரு இடையூறுகளையும் இந்தத் திட்டம் எதிர்கொள்ளாமல் பார்த்துக் கொள்ளுமாறு எம்.ஆர்.எல். நிறுவனம் பணிக்கப்பட்டதாக அவர் கூறினார்.
இந்த இரயில் திட்டம் தேசிய பெருமைக்கு ஒரு ஆதாரமாகவும் இந்த தடத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பொருளாதார வளர்ச்சிக்கு உந்து சக்தியாவும் மாறும் என்று நான் நம்புகிறேன். இதனால் மக்களுக்கும் நாட்டிற்கும் நேரடி நன்மைகள் கிட்டும் என அவர் சொன்னார்.
மடாணி கொள்கையில் உள்ள நல்வாழ்வு அம்சத்திற்கு ஏற்ப இது அமைந்துள்ளது. இதனை முழு அரசாங்க அணுகுமுறை மற்றும் முழு தேச அணுகுமுறை மூலம் குறிப்பாக, கூட்டரசு, மாநில மற்றும் தனியார் அரசாங்கங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு மூலம் மட்டுமே அடைய முடியும் என்று அவர் இன்று முகநூல் பதிவில் கூறினார்.


