தங்காக், ஜூலை 5- பிரபலமான இ-காமர்ஸ் செயலி மூலம் வழங்கப்பட்ட இல்லாத பகுதிநேர வேலை வாய்ப்பினை நம்பிய ஒரு பெண் வர்த்தகர் 66,825 வெள்ளியை இழந்தார்.
முப்பத்தாறு வயதான பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அந்த செயலி மூலம் மூலம் வேலை வாய்ப்பு வழங்கப்பட்ட வேளையில் பொறுப்புகளை நிறைவேற்றி முடிந்ததும் அதற்கான கமிஷன் வழங்கப்படும் என்ற வாக்குறுதியுடன் பல பணிகளைச் செய்ய அறிவுறுத்தப்பட்டதாக தங்காக் மாவட்ட காவல்துறைத் தலைவர் ரோஸ்லான் முகமட் தாலிப் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவர் அறிவுறுத்தல்களுக்கும் இணங்கி இடப்பட்ட அனைத்துப பணிகளையும் முடித்தபிறகு வாக்குறுதியளித்தபடி எந்தப் பணமும் வழங்கப்படவில்லை.
பாதிக்கப்பட்டவர் எட்டு வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு 12 பணப் பரிமாற்ற பரிவர்த்தனைகளைச் செய்ததாக நம்பப்படுகிறது, இதன்வழி அவருக்கு மொத்தம் 66,825 வெள்ளி இழப்பு ஏற்பட்டுள்ளது என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, பிரம்படி மற்றும் அபராதம் விதிக்க வகை செய்யும் தண்டனைச் சட்டத்தின் 420வது பிரிவின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாக அவர் சொன்னார்.
குறுகிய காலத்தில் லாபகரமான வருமானத்தை உறுதியளிக்கும் இணைய வேலை வாய்ப்புகள் குறித்து பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மோசடிக்கு ஆளாகாமல் இருக்க எந்தவொரு முதலீடு அல்லது இணைய வேலை வாய்ப்பிலும் பங்கேற்பதற்கு முன் நன்கு ஆய்வு செய்யுங்கள் என்று அவர் கூறினார்.


