கோலாலம்பூர், ஜூலை 5: இவ்வாண்டு ஜனவரி 1 முதல் ஜூலை 3 வரையிலான காலக்கட்டத்தில் சட்டவிரோத குடியேறிகளை வேலைக்கு அமர்த்திய அல்லது தங்க வைத்த சந்தேகத்தின் பேரில் மலேசிய குடிநுழைவுத் துறை 1,005 முதலாளிகளை கைது செய்துள்ளது.
கைது செய்யப்பட்ட முதலாளிகளில் உணவகங்கள், தொழிற்சாலைகள் மற்றும் கடைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களும் அடங்குவர் என்று குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் டத்தோ ஜக்காரியா ஷாபான் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட பெரும்பாலான முதலாளிகள் செல்லுபடியாகும் பாஸ்கள் அல்லது அனுமதிகள் இல்லாமல் வெளிநாட்டினருக்கு புகலிடம் அளித்த உள்நாட்டினராவர் என அவர் சொன்னார்.
ஜூலை மாத நிலவரப்படி நிர்ணயிக்கப்பட்ட முக்கிய அடைவு நிலைக்கான குறியீட்டில் (கேபிஐ) 70 சதவீதத்தை நாங்கள் அடைந்துள்ளோம். மேலும் இந்த ஆண்டு இறுதிக்குள் இலக்கை எட்ட முடியும் என்று நான் நம்புகிறேன் என்று அவர் சொன்னார்.
இன்று இங்கு நடைபெற்ற கோலாலம்பூர் ஜிம் ஓட்டப் பந்தயம் (மற்றும் வாடிக்கையாளர் சந்திப்பு தின நிகழ்ச்சியை முடித்து வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார். கோலாலம்பூர் குடிநுழைவுத் துறை இயக்குநர் வான் முகமது சௌபீ வான் யூசோஃப்பும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்.
அதே காலகட்டத்தில் குடிநுழைவுத் துறை நாடு முழுவதும் 97,322 வெளிநாட்டினரிடம் சோதனை உட்பட 6,913 நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும் சட்டங்களை மீறிய சந்தேகத்தின் பேரில் 26,320 பேர் கைது செய்யப்பட்டதாகவும் ஜக்காரியா கூறினார்.
இந்த முயற்சியை நாங்கள் தொடர்ந்து தீவிரப்படுத்துவோம். மேலும் சமூகத்தில் ஒரு சிலரால் சித்தரிக்கப்படுவது போல் சட்டவிரோத குடியேறிகளின் பெருக்கத்தை தடுப்பதில் சமரசம் செய்யவோ அல்லது அனுமதிக்கவோ மாட்டோம் என்று அவர் தெரிவித்தார்.


