கோலாலம்பூர், ஜூலை 5- சுங்கை பூலோ, பாயா ஜெராசில் துன்புறுத்தலுக்கு ஆளானதாக சந்தேகிக்கப்படும் இரண்டு வயதுச் சிறுமி உடலில் ஏற்பட்ட சிராய்ப்பு, வீக்கம் மற்றும் காயங்கள் காரணமாக உயிரிழந்தார்.
அச்சிறுமியின் மரணம் தொடர்பில் நேற்று முன்தினம் இரவு 12.45 மணியளவில் தாங்கள் சுங்கை பூலோ மருத்துவமனையின் மருத்துவ அதிகாரியிடமிருந்து புகாரைப் பெற்றதாக சுங்கை பூலோ மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் முகமது ஹபிஷ் முகமது நோர் கூறினார்.
அந்த சிறுமியை சுயநினைவற்ற நிலையில் வளர்ப்பு பெற்றோர்களான 27 மற்றும் 28 வயதுடைய தம்பதியர் மருத்துவமனைக்கு கொண்டு வந்ததாக அவர் சொன்னார்.
அந்த சிறுமி சுயநினைவற்ற நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார் என்று பணியில் இருந்த மருத்துவர் தனது புகாரில் கூறியுள்ளார்.
அக்குழந்தையின் உடல் முழுவதும் சிராய்ப்புகளும், காயங்களும் வீக்கமும் காணப்பட்டதோடு வாய் மற்றும் மூக்கில் இரத்தம் உறைந்த நிலையிலும் காணப்பட்டது என்று அவர் அறிக்கை ஒன்றில் சொன்னார்.
இந்த புகாரைத் தொடர்ந்து விசாரணைக்கு உதவும் பொருட்டு அந்த தம்பதியரை சுங்கை பூலோ மாவட்ட குற்றப்புலனாய்வுத் துறை கைது செய்தது என்று அவர் குறிப்பிட்டார்.
அவ்விருவருக்கு முந்தையக் குற்றப்பதிவுகள் இல்லை என்பது விசாரணையில் கண்டறியப்பட்டதாக கூறிய அவர், அவர்களை விசாரணைக்காக தடுத்து வைப்பதற்கான நீதிமன்ற அனுமதி நேற்று பெறப்பட்டது என்றார்.
அந்த சிறுமியின் உடல் சவப்பரிசோதனைக்காக சுங்கை பூலோ மருத்துவமனையின் தடயவியல் பிரிவுக்கு அனுப்பப்பட்டது.


