ஷா ஆலம், ஜூலை 5- கோல குபு பாரு, டேவான் மெர்டேக்காவில் இன்று நடைபெறும் உலு சிலாங்கூர் மாவட்ட நிலையிலான ஜெலாஜா ஜோப்கேர் வேலை வாயப்பு கண்காட்சியில் 3,810 வேலை வாய்ப்புகளை பல்வேறு நிறுவனங்கள் வழங்குகின்றன.
அவற்றில் 67 விழுக்காடு அல்லது 2,553 வேலைகள் 2,000 வெள்ளிக்கும் மேல் ஊதியத்தை வழங்கும் வேளையில் 1,257 வேலை வாய்ப்புகள் (33 விழுக்காடு) 2,000 வெள்ளிக்கும் குறைவான சம்பளத்தை வழங்குகின்றன என்று மனித வளத்துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாப்பாராய்டு கூறினார்.
இந்த வேலை வாய்ப்புகளில் 90 விழுக்காடு சிலாங்கூரிலும் எஞ்சியவை வெளி மாநிலங்களிலும் வழங்கப் படுகின்றன என்று அவர் குறிப்பிட்டார்.
வேலை தேடுவோருக்கு வழங்கப்படும் பெரும்பாலான வேலை வாய்ப்புகள் உயர்ந்த சம்பளத்தை வழங்கக் கூடியவையாகவும் நடப்பு வாழ்க்கைச் செலவினத்திற்கு ஏற்ற வகையிலும் உள்ளன என்று அவர் தெரிவித்தார்.
மக்கள் பொருத்தமான வேலை வாய்ப்புகளைப் பெறுவதை உறுதி செய்வதிலும் வேலையில்லா விகிதத்தை குறைப்பதிலும் மாநில அரசும் அரசு நிறுவனங்களும் கொண்டுள்ள அக்கறையை இந்த வேலை வாய்ப்பு கண்காட்சி புலப்படுத்துகிறது என்றார் அவர்.
இன்று காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெறும் இந்த நிகழ்வில் பிரசரானா மலேசியா பெர்ஹாட், ஸ்ரீ நோனா ஃபூட் மேனுபெக்சரிங், இங்ரேஸ் டெக்னோலோஜி, லியோக் பேட்டரி (ம) சென். பெர்ஹாட் உள்பட 25 நிறுவனங்கள் வேலை வாய்ப்பினை வழங்குகின்றன.
இங்கு வருவோர் நேரடி நேர்காணலில் பங்கேற்பதற்குரிய வாய்ப்பினைப் பெறும் வேளையில் வேலை வாய்ப்புகளை வழங்கும் நிறுவனங்கள் வாயிலாக சிறப்பான எதிர்காலத்தை அடைவதற்கான சாத்தியக் கூறுகளையும் அடையாளம் காண முடியும் என பாப்பாராய்டு சொன்னார்.
மாநிலத்தின் ஐந்து மாவட்டங்களில் தொடரவிருக்கும் ஜொலாஜா ஜோப்கேர் கண்காட்சி தொடர்பான விபரங்கள் வருமாறு-
- (உலு லங்காட்- ஜூலை 19, டேவான் பெர்பண்டாரான் எம்.பி.ஏ.ஜே.
- கோல சிலாங்கூர்- ஆகஸ்டு 9, டேவான் எம்.பி.கே.எஸ். புஞ்சா ஆலம்
- கிள்ளான்- செப்டம்பர் 27, டேவான் ஹம்சா
- சபாக் பெர்ணம்- அக்டோபர் 11, டேவான் துன் ரசாக்
- சிப்பாங்- நவம்பர் 15, டேவான் கம்யூனிட்டி பி.பி.எஸ்.டி.


