கோலாலம்பூர், ஜூலை 4 - முதலாம் வகுப்பில் சேருவதற்கு முன்பு மாணவர்களுக்கு கண் பரிசோதனை செய்வது, சிறு வயதிலிருந்தே பார்வைக் கோளாறுகளை நிவர்த்தி செய்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செயல்படுத்தப்பட வேண்டும் என்று பிரதமர் துறை (கூட்டாட்சி பிரதேசங்கள்) அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சாலிஹா முஸ்தபா கூறினார்.
கடந்த ஆண்டு கோலாலம்பூரைச் சுற்றியுள்ள ஐந்து தொடக்கப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு மாணவர்கள் 2008 பேரிடம நடத்திய கண் பரிசோதனையில் அவர்களில் சுமார் ஐந்து சதவீதம் பேருக்கு கண் பிரச்சனைகள் இருப்பது கண்டறியப்பட்டது என்று அவர் கூறினார்.
இந்த எண்ணிக்கையில், 88 சதவீத குழந்தைகளுக்கு குறுகியப் பார்வை, நான்கு சதவீதம் பேர் நிறக்குருடு மற்றும் எட்டு சதவீதம் பேர் மாறுகண் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஜலிஹா விளக்கினார்.
"2023ஆம் ஆண்டில் அம்ப்லியோபியா மற்றும் பார்வைக் குறைபாடு பரிசோதனை அல்லது ஏவிஐஎஸ் திட்டத்தின் மூலம் மலேசிய சுகாதார அமைச்சகம் நடத்திய ஆய்வில், மலேசியாவில் உள்ள பாலர் குழந்தைகளில் கிட்டத்தட்ட 30 சதவீதத்தினருக்கு பார்வை பிரச்சனைகள் இருப்பது கண்டறியப்பட்டது. ஆனால், அவர்களுக்கு இந்த விஷயம் தெரியாது
"இதன் விளைவாக, இந்த குழந்தைகள் சாதாரண பார்வை கொண்ட தங்கள் சகாக்களுடன் ஒப்பிடும்போது குறைந்த அளவிலான கல்வி சாதனை மற்றும் தன்னம்பிக்கையைக் கொண்டிருக்கலாம் என WHO வெளியிட்ட பார்வை குறித்த உலக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"இந்தப் பார்வைக் குறைபாடு குழந்தைகளின் அறிவாற்றல் மற்றும் மொழி வளர்ச்சியில் தாமதத்தை ஏற்படுத்தக்கூடும், இது வாழ்நாள் முழுவதும் நீடிக்கும்" என்று ஜலிஹா தெரிவித்தார்.


