சுபாங் ஜெயா, ஜூலை 4 - கடந்த ஏப்ரல் மாதம் புத்ரா ஹைட்ஸில் நிகழ்ந்த எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவம் குறித்து விசாரணை நடத்த எந்தவொரு சுயேச்சை அமைப்பும் விரும்பினால் மாநில அரசுக்கு ஆட்சேபனை இல்லை என்று மந்திரி புசார் தெரிவித்தார்.
எரிவாயு குழாய் மற்றும் மண் மாதிரிகள் மற்றும் நீரோட்டத்தின் அடிப்படையில் மிகவும் விரிவாக விசாரணை நடத்தப்பட்டதால் விசாரணை முடிவுகளை மாநில அரசு மூடி மறைக்கவில்லை என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி விளக்கினார்.
விசாரணையை விரிவான அளவில் மேற்கொண்ட நிலையில் நாங்கள் அதை மூடிமறைக்கிறோம் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
தவறுகளை மறைக்க நான் விசாரணைக்கு உத்தரவிட்டேன் என்ற குற்றச்சாட்டுகளும் உள்ளன. நீங்கள் காவல்துறை மற்றும் தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறையிடம் கேட்கலாம்.
மேலும், அது மந்திரி புசார் கழகத்துடன் (எம்.பி.ஐ.) தொடர்புடையது என்ற குற்றச்சாட்டுகள் உள்ளன. அது கண்மூடித்தனமான மற்றும் தவறான குற்றச்சாட்டு. விசாரணை நடத்துவது எந்தவொரு தரப்பினரின் பொறுப்பாகும். நாங்கள் அதை முறையாகவும் விரிவாகவும் செய்தோம்.
மாநில அரசு எதையும் மறைக்கவில்லை அல்லது எந்தவொரு தரப்பினரையும் சிக்கவைக்கவோ அல்லது வலிந்து நடவடிக்கை எடுக்கவோ விரும்பவில்லை. அறிக்கை வெளியிடப்பட்ட பிறகு என்ன செய்ய வேண்டும் என்பதிலும் சம்பவம் மீண்டும் நிகழாமல் தடுக்க எடுக்கப்படும் நடவடிக்கைகளிலும் எங்கள் கவனம் உள்ளது என்று அவர் கூறினார்.
நேற்று இங்கு சிலாங்கூர் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரக் கழகத்தின் (சிடெக்) 10வது ஆண்டு விழாவில் நேற்று கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
அதே நேரத்தில், இந்த சம்பவம் தொடர்பான விசாரணை குறித்து மாநில சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஒரு சிறப்பு விளக்க அமர்வு நடத்தப்படும் என்றும் அமிருடின் அறிவித்தார்.
விசாரணை அறிக்கையை கேட்க ஆர்வமுள்ள சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நான் விளக்குவேன். ஏனெனில் அதில் பல தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. இருப்பினும், இந்த அறிக்கை முழுமையாக வெளியிடப்படும் வரை நாம் காத்திருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
முன்னதாக, இந்த சம்பவம் தொடர்பான விசாரணை மேல் நடவடிக்கை இல்லை என வகைப்படுத்தப்பட்டது குறித்து தாங்கள் திருப்தி அடையவில்லை எனக் கூறிய கம்போங் கோல சுங்கை பாரு குடியிருப்பாளர்கள் நல அமைப்பு, மறு விசாரணையை நடத்த கோரியது.


