சுக்காய், ஜூலை 4 - பெராசிங் நெடுஞ்சாலை ஓய்வுப் பகுதியின் நுழைவாயிலில் உள்ள சாலைத் தடுப்பில் மோட்டார் சைக்கிள் மோதிய சம்பவத்தில் மலேசியா திரங்கானு பல்கலைக்கழக (யுஎம்டி) மாணவி ஒருவர் உயிரிழந்த வேளையில் அவரின் தோழி படுகாயமடைந்தார்.
கோலாலம்பூர், கோம்பாக்கைச் சேர்ந்த சித்தி ஐன் பல்கிஸ் ஹம்டான் (வயது 23) என்பவரே இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் என உறுதி செய்யப்பட்ட வேளையில் நெகிரி செம்பிலானின் மந்தின் நகரைச் சேர்ந்த அவரது தோழி நூர் இந்தான் ஷஃபிரா பட்ரிஷா ஹம்சா (வயது 22) படுகாயமடைந்தார் என்று கெமாமான் மாவட்ட காவல்துறைத் தலைவர் சூப்ரிண்டெண்டன் முகமட் ராஸி ரோஸ்லி தெரிவித்தார்.
அந்த மோட்டார் சைக்கிளில் பயணித்த நூர் இந்தானுக்கு தலை மற்றும் கால்களில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் சிகிச்சைக்காக அவர் பகாங், குவாந்தனில் உள்ள தெங்கு அம்புவான் அப்சான் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் ராஸி சொன்னார்.
கோல திரங்கானுவிலிருந்து குவாந்தானுக்கு பயணித்துக் கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து இடதுபுறத்தில் உள்ள சாலைத் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானதாக நம்பப்படுகிறது என்று அவர் கூறினார்.
இந்த விபத்து தொடர்பில் நேற்று மாலை 3.00 மணியளவில் காவல்துறைக்கு அவசர அழைப்பு வந்தது. இவ்விபத்தின் காரணமாக சித்தி ஐன் சாலையின் இடதுபுறம் தூக்கி எறியப்பட்ட வேளையில் அவரது தோழி சாலையில் விழுந்தது முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டது.
பலத்த காயங்கள் காரணமாக சித்தி ஐன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காகக் கெமமான் மருத்துவமனை தடயவியல் பிரிவுக்கு அனுப்பப்பட்டது என்று அவர் பெர்னாமா தொடர்பு கொண்டபோது கூறினார்.


