ஷா ஆலம், ஜூலை 4 - கோல சிலாங்கூர் நகராண்மைக் கழகம் (எம் பி.கே.எஸ்.) சுங்கை பூலோ மற்றும் ஜெராம், சுங்கை செம்பிலாங்கில் நடத்திய அதிரடிச் சோதனையில் அனுமதியின்றி வெளிநாட்டினரால் நடத்தப்படும் வணிக வளாகங்களுக்கு ஆறு குற்றப்பதிவுகள் வழங்கப்பட்டன.
கடந்த புதன்கிழமை மேற்கொள்ளப்பட்ட இந்நடவடிக்கையில் உரிமம் இல்லாமல் வணிகத்தை நடத்திய குற்றத்திற்காகக் கடைகளை மூடவும் வணிக உபகரணங்களை பறிமுதல் செய்யவும் வகை செய்யும் நான்கு அறிவிப்புகளை நகராண்மைக் கழகம் வெளியிட்டது.
அதேசமயம், மலேசிய குடிநுழைவுத் துறை வெளிநாட்டு நபர்களிடம் சோதனை நடத்தி பயண ஆவணங்கள் மற்றும் நாட்டில் அவர்களின் நிலை குறித்த மேல் விசாரணைக்காக 14 பேரை தடுத்து வைத்துள்ளது.
சட்டவிரோத வணிக நடவடிக்கைகளைத் தடுப்பதிலும் அனைத்து வர்த்தக வளாக நடத்துநர்களும் சட்டத்திற்கு உட்பட்டு நடப்பதை உறுதி செய்வதிலும் நகராண்மைக் கழகம் கொண்டுள்ள உறுதியான நிலைப்பாட்டை இந்த நடவடிக்கை பிரதிபலிக்கிறது அது அறிக்கை ஒன்றில் கூறியது.
இந்த சோதனை நடவடிக்கையில் குடிநுழைவுத் துறை, மலேசிய நிறுவன ஆணையம் (எஸ்.எஸ்.எம்.) மற்றும் நகராண்மைக் கழக தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த மொத்தம் 52 அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் ஈடுபட்டனர்.
இதற்கிடையில், பொது நலன் கருதி சந்தேகத்திற்கிடமான வணிக நடவடிக்கைகள் அல்லது செல்லுபடியாகும் உரிமம் இல்லாத வளாகங்கள் குறித்து அதிகாரிகளிடம் தகவல் தெரிவிக்குமாறு நகராண்மைக் கழகம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டது.
கோல சிலாங்கூர் மாவட்டத்தில் வணிகச் சூழல் சாதகமான, கட்டுப்படுத்தப்பட்ட மற்றும் சட்டத்தின் அடிப்படையில் இருப்பதை உறுதி செய்வதற்காக அவ்வப்போது இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அது குறிப்பிட்டது.


