பெட்டாலிங் ஜெயா ஜூலை 3 ;- இன்று ஜூலை 3 ந் தேதி வியாழக்கிழமை காலை 11 மணிக்கு , ஜாலான் காசிங் பெட்டாலிங் ஜெயா வில் உள்ள மஹாராஜ் உணவகத்தில் துவங்கிய மலேசியாவின் 13 திட்டவரைவில் இந்தியர்கள் நிலை குறித்தும் முன்னேற்றங்கள் குறித்து விளக்கும் நிகழ்வு இல்திஸாம் அறக்கட்டளையின் தலைவர் குணசேகரன் கருப்பையாவின் வரவேற்புரையுடன் தொடங்கியது.
இந்நாட்டில் இந்திய சமுதாய மேம்பாடுகள் குறித்து சுமார் 200 பொது அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் வழங்கியுள்ள பல்வேறு பரிந்துரைகளை உட்படுத்திய 11 திட்டங்களை 5 முக்கிய மேம்பாட்டு திட்ட தொகுப்பாக பொருளாதார அமைச்சு மூலம் அரசாங்கத்திடம் இந்த அமைப்பு வழங்கியுள்ளதாக முன்னாள் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினரும் இல்திஸாம் அறக்கட்டளையின் முக்கிய செயற்குழு உறுப்பினருமான சார்ல்ஸ் சந்தியாகோ தெரிவித்தார்.
அதே வேளையில் இந்திய இளைஞர்களின் சில செயல்முறைகள் பற்றி ஏமாற்றம் தெரிவித்த அவர், இன்றைய இளைஞர்கள் நாட்டின் தலைவர்கள் மற்றும் சமூக தொண்டர்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பதை விட குண்டர் கும்பல் தலைவர்களின் மரணங்களுக்கு அனுதாபம் தெரிவிப்பதில் காட்டும் அக்கறை அச்சத்தை ஊட்டுவதாக உள்ளது என்றார்.
குறைந்த மாணவர்கள் எண்ணிக்கையால் உரிமத்தை இழக்கும் அபாயத்தில் உள்ள பள்ளிகளின் நிலையை கவனித்து மாற்று இடங்களுக்கு பள்ளிகளை இடம் மாற்றுவது மற்றும் பள்ளி பேருந்து கட்டண சுமையால் மாணவர்கள் பள்ளிக்கு மட்டம் போடும் நிலை போன்றவற்றிலும் கவனம் செலுத்த வேண்டிய அவசியத்தை இந்த பரிந்துரைகள் எடுத்துரைப்பதாக கூறினார்.
கல்விக்கு ஏற்ற தொழில்கள் இந்தியர்கள் பெறுவது மற்றும் அரசு நிர்ணயித்துள்ள அடிப்படை சம்பளமான RM 1700 பெறாத பாட்டாளிகள் நிலை, ஆண்டுக்கு 5000 இந்திய இளைஞர்களுக்கு திவேட் கல்வி வழி அவர்களின் ஊதிய உயர்வு மற்றும் தொழில் திறன் மேம்பாடு அளிப்பதையும் வலியுறுத்துகிறது இத்திட்டம்.


