சிப்பாங், ஜூலை 3 - வர்த்தக மற்றும் முதலீட்டு விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் பெறுவதை விரைவுபடுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட ஸீபீட் சிலாங்கூர் கொள்கை எதிர்வரும் அக்டோபர் மாதம் தொடங்கப்படும்.
ஊராட்சி மன்ற நிலையிலான நடைமுறைகள், ஒப்புதல் செயல்முறைகள் மற்றும் தொடர்புடைய விவகாரங்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி அவற்றை விரைவாகவும் திறமையாகவும் மாற்றி மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பதற்கான கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த முயற்சியாக இது விளங்குகிறது என்று மந்திரி புசார் கூறினார்
நான்கு கூறுகள் மூலம் மேம்பாட்டாளர்கள் மற்றும் முதலீட்டாளர்களுடனான கூட்டு பரிவர்த்தனைகளை அங்கீகரிப்பதில் கவனம் செலுத்துவது முதல் படியாகும் என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.
அடுத்தக் கட்ட நகர்வில் புகார்கள் போன்ற மக்களுடன் நேரடித் தொடர்பு கொள்ளும் அம்சங்களும் இதில் உள்ளடங்கும் என்று இன்று சிப்பாங் சிலாங்கூர் நகராண்மைக் கழகம் 2035 வரைவு உள்ளூர் திட்டத்திற்கான விளம்பரம் மற்றும் பொதுமக்கள் பங்கேற்புத் திட்டத்தைத் தொடங்கி வைத்த பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.
ஸ்பீட் சிலாங்கூர் கொள்கையானது முதலீட்டை ஈர்ப்பதற்காக தொழில்துறை பகுதி திட்டமிடலுக்கான ஒப்புதலை விரைவுபடுத்துவது உட்பட, ஊராட்சி மன்றங்களால் முன்னர் தனித்தனியாக செயல்படுத்தப்பட்ட பல்வேறு திட்டங்கள் மற்றும் அணுகுமுறைகளின் ஒரே தொகுப்பு மற்றும் ஒருங்கிணைப்பாகும் என்று அமிருடின் விளக்கினார்.
வழக்கமாக இரண்டு மாதங்கள் பிடிக்கக்கூடிய ஒப்புதல் காலத்தை ஒரு மாதமாகக் குறைக்கலாம். மூன்று மாதங்கள் எடுக்கும் சிலவற்றை ஒரு மாதத்திற்கும் குறைவாகக் குறைக்கலாம். இவை அனைத்தும் மாநில பொருளாதார திட்டமிடல் பிரிவால் நிர்வகிக்கப்படும் ஒரு பயிற்சிப் பட்டறையில் முடிவு செய்யப்பட்டன என்றார் அவர்.


