கோலா லங்காட், ஜூலை 3 - ஆபத்தான தெருநாய்களுக்கான சிறப்பு பராமரிப்பு மையத்தை கோலா லங்காட் நகராண்மை கழகம் கட்டும். மாவட்டத்தில் விலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து இந்த மையம் அடுத்த ஆண்டு RM1.9 மில்லியன் செலவில் கட்டி முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தெருநாய்கள் பிரச்சனை குடியிருப்பாளர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது, இதில் நாய் கடித்தல் சம்பவங்களும் அடங்கும் என கோலா லங்காட் நகராண்மை கழகக் கவுன்சிலர் ஆங் லீ யோங் கூறினார்.
“இந்தப் பிரச்சனையை மிகவும் திறம்பட நிர்வகிக்க, தெருநாய்களைக் கட்டுப்படுத்துவதற்கும் பராமரிப்பதற்கும் கோலா லங்காட் நகராண்மை கழகம் ஓர் ஏக்கர் பராமரிப்பு மையத்தை கட்ட நிதி ஒதுக்கியுள்ளது. இதன் கட்டுமானம் 2026இல் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,” என அவர் மீடியா சிலாங்கூர் சந்தித்தபோது கூறினார்.
குடியிருப்பாளர்களிடமிருந்து புகார்கள் வரும்போது தெருநாய்களைப் பிடிக்க கோலா லங்காட் நகராண்மை கழகம் அதிகாரிகளையும் அனுப்பும், ஆனால், விலங்குகள் ஓடி ஒளிந்து கொள்கின்றன இதனால் பிடிப்பு முயற்சிகள் கடினமாகிவிடுகிறது என்றும் அவர் கூறினார்.
“பாரம்பரிய பிடிப்பு முறைகள் முறையாக செயல்படுத்தப்படாவிட்டால் விலங்கு நல அமைப்புகளிடமிருந்து விமர்சனங்களும் வரக்கூடும்” என்று அவர் கூறினார்.
கோலா லங்காட் நகராண்மை கழகம் ஒரு கருத்தடை திட்டத்தையும் செயல்படுத்தியதாக அவர் விளக்கினார். ஆனால், இந்த செயல்முறைக்கு முன்கூட்டியே விலங்குகளின் சுகாதார மதிப்பீடு தேவைப்படுகிறது மற்றும் அதிக பணம் செலவாகிறது. அதே நேரத்தில் தெருநாய்களின் இனப்பெருக்கம் விகிதம் மிக அதிகமாக உள்ளதனால் அவைகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவது கடினம்.
தெருநாய்களைப் பிடிக்கும் முயற்சிகளை சமூகத்தில் மேற்கொள்ள உதவும் வகையில், ஒவ்வொரு பகுதியிலும் உள்ள குடியிருப்பாளர் சங்கங்களுக்கு நாய் கூண்டுகள் விநியோகிக்கப்பட வேண்டும் என்றும் கோலா லங்காட் நகராண்மை கழக முன்மொழிந்ததாக அவர் கூறினார்.
ஜூன் 26 அன்று நடைபெற்ற கோலா லங்காட் நகராண்மை கழக மாதாந்திரக் கூட்டத்தில், பராமரிப்பு மைய கட்டுமானத்தை விரைவுபடுத்துதல், கட்டாய கருத்தடை திட்டத்தை செயல்படுத்துதல், பொதுக் கல்வி மற்றும் விழிப்புணர்வை வலுப்படுத்துதல் மற்றும் சட்ட அமலாக்கத்தை அதிகரித்தல் உள்ளிட்ட நான்கு நடவடிக்கைகளுக்கு பரிந்துரை வழங்கப் பட்டன.


