ஜாஸின், ஜூலை 3 - இன்று அதிகாலை, மெர்லிமாவ்விலுள்ள 'டாங் அனும்' இடைநிலைப்பள்ளியில் தீ விபத்து ஏற்பட்டது. அதில் இரண்டு ஆசிரியர் அறைகள் மற்றும் பள்ளி நிர்வாக அலுவலகம் எரிந்து நாசமாகியுள்ளது.
இந்தத் தீ விபத்தில் பொருட்சேதம் மட்டுமே ஏற்பட்டது, மாறாக எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று மெர்லிமா தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய செயல்பாட்டுத் தளபதி முகமட் சுகூர் முகமட் அலி கூறியுள்ளார்.
இந்த தீ விபத்து தொடர்பான தகவல் கிடைத்தவுடனேயே சம்பவ இடத்திற்கு விரைந்த 19 தீயணைப்பு வீரர்கள் உடனடியாக தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டனர் என அவர் தெரிவித்துள்ளார்.
இவ்விபத்திற்கான காரணம் குறித்த விசாரணையும் தற்போது நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது.


