சிரம்பான், ஜூலை 3 - பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள், திடல்கள் மற்றும் கடற்கரைகள் உள்ளிட்ட பொது பொழுதுபோக்கு இடங்களில் மதுபானங்களை அருந்துவதை நெகிரி செம்பிலான் உடனடியாக தடை செய்துள்ளது.
ஓய்வு மற்றும் பொழுதுபோக்கிற்காக இந்த பகுதிகளைப் பயன்படுத்தும் பொதுமக்களை மதிப்பதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஹாருன் கூறினார்.
இந்த தடையை மீறினால் பிபிடிகள் மற்றும் காவல்துறையினரால் அதிகபட்சமாக RM2,000 வரை அபராதம் விதிக்கப்படும்.
“இந்தப் பகுதிகளில் மது அருந்துபவர்கள் பாட்டில்கள் மற்றும் பிற பொட்டலங்களை விட்டுச் செல்வது குறித்து பல புகார்கள் எங்களுக்கு வந்துள்ளன.
“நாங்கள் மது அருந்துவதை முற்றிலுமாக தடை செய்யவில்லை. மக்கள் கடைகளிலோ அல்லது தனியார் வளாகங்களிலோ அருந்தலாம். ஆனால், இந்தப் பொது இடங்களில் அல்ல,” என்று மாநில நிர்வாகக் குழு கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய பின்னர் அவர் கூறினார்.
இதற்கிடையில், அதிகம் சத்தம், சண்டைகள் மற்றும் கைவிடப்பட்ட உடைந்த மது பாட்டில்களால் ஏற்படும் இடையூறுகள் உள்ளிட்ட புகார்கள் பெறப்பட்டன என உள்ளூர் அரசாங்க மேம்பாடு, வீட்டுவசதி மற்றும் போக்குவரத்துக் குழுவின் தலைவர் ஜே. அருள் குமார் கூறினார்.
“குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் காயமடைந்த சம்பவங்களும் நடந்துள்ளன என தெரிவித்தார்.
"பொழுதுபோக்கு மற்றும் ஓய்வெடுப்பதற்காக விளையாட்டு மைதானங்கள், பூங்காக்கள் மற்றும் கடற்கரைகள் உள்ளன. ஆனால் இந்த இடங்கள் மது அருந்தும் இடங்களாகப் பயன்படுத்தப்படும்போது, மக்கள் அங்கு செல்ல விரும்புவதில்லை," என்று அவர் கூறினார்.
— பெர்னாமா


