கோலாலம்பூர், ஜூலை 3 - இம்மாதம் 8 முதல் 11 வரை கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் நடைபெறவிருக்கும் 58வது ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் மற்றும் அதன் தொடர்புடைய கூட்டங்களை முன்னிட்டு அரச மலேசியா போலீஸ்படை (பிடிஆர்எம்) 5,121 உறுப்பினர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தும்.
காவல்துறை விரிவான பாதுகாப்புத் திட்டத்தை வகுத்துள்ளதாகவும் கூட்டம் சீராகவும் முறையாகவும் நடைபெறுவதை உறுதிசெய்ய தொடர்ச்சியான கண்காணிப்பை அது மேற்கொள்ளும் என்றும் புக்கிட் அமான் உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறை இயக்குநர் டத்தோஸ்ரீ அஸ்மி அபு காசிம் கூறினார்.
இந்தக் கூட்டத்தை முன்னிட்டு உயர் தயார்நிலையை உறுதி செய்வதற்கு போலீஸ்படை பொருத்தமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பு, போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் அவசரநிலைகளைக் கையாள்வதில் தீவிர கவனம் செலுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.
இக்கூட்டம் சீராக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக முக அடையாள அமைப்பு முறை மற்றும் வெடிபொருட்களைக் கண்டறிதல் போன்ற அதிநவீன தொழில்நுட்பத்தையும் இந்தக் குழு பயன்படுத்தும் என்று பெர்னாமாவிடம் அவர் தெரிவித்தார்.
பாதுகாப்பு நோக்கத்திற்காகக் கோலாலம்பூர் போலீஸ் தலைமையகம், மேலாண்மைத் துறை, மத்திய ரிசர்வ் படை, சிறப்பு நடவடிக்கைப் பிரிவு, 69 கமாண்டோ மற்றும் சிறப்பு பிரிவு உள்ளிட்ட பல்வேறு துறைகள் மற்றும் பிரிவுகளை காவல்துறை ஒருங்கிணைக்கும் என்று அஸ்மி கூறினார்.
பிரதான மாநாட்டு மையம் தவிர கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் மற்றும் சுபாங் விமான நிலையம் உள்ளிட்ட பிற முக்கிய பகுதிகளுக்கும் பாதுகாப்புக் கட்டுப்பாடுகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன என அவர் குறிப்பிட்டார்.
பேராளர்கள் தங்குமிடங்கள் மற்றும் பேராளர்கள் வருகைப் பகுதியைச் சுற்றியுள்ள சில மண்டலங்களிலும் பாதுகாப்புக் கட்டுப்பாடு தீவிரப்படுத்தப்படும். அவை குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே அனுமதி வரையறுக்கப்பட்ட, முழுமையாக தடைசெய்யப்பட்ட அல்லது பகுதி தடைசெய்யப்பட்ட பகுதிகளாக அரசிதழில் வெளியிடப்படும் என்று அவர் கூறினார்.


