ஜோகூர் பாரு, ஜூலை 3 - சுற்றுலாப் பேருந்து மற்றும் இரண்டு லோரிகள் சம்பந்தப்பட்ட சாலை விபத்தில் இருவர் பலியான வேளையில் மேலும் 16 பேர் காயமடைந்தனர்.
இவ்விபத்து வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையின் (பிளஸ்) தெற்கு நோக்கிச் செல்லும் தடத்தின் 80.7வது கிலோமீட்டரில் ஆயர் ஹீத்தாம் அருகே நேற்றிரவு நிகழ்ந்தது.
இவ்விபத்தில் இறந்தவர்கள் இந்தோனேசிய பிரஜைகளான ஹிடிர்மான் (வயது 43) மற்றும் சுல்ஹாடி (வயது 44) என அடையாளம் காணப்பட்டதாக ஆயர் ஹீத்தாம் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் தலைமை உதவி தீயணைப்புத் தலைவர் முகமட் ஷாமின் முகமது சாலிகின் கூறினார்.
இவ்விபத்து தொடர்பில் பின்னிரவு 12.44 மணிக்கு தமது துறைக்கு அவசர அழைப்பு வந்தததைத் தொடர்ந்து ஆயர் ஹீத்தாம் மற்றும் யோங் பெங் தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த ஏழு உறுப்பினர்களைக் கொண்ட தீயணைப்பு மீட்பு குழு அவசர மருத்துவ சேவைப் பிரிவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக அவர் தெரிவித்தார்.
சம்பவ இடத்தை அடைந்த தீயணைப்புக்குழுவினர் சுற்றுலா பேருந்து, இழுவை லோரி மற்றும் டேங்கர் லோரி ஆகியவை சம்பந்தப்பட்ட சாலை விபத்து ஏற்பட்டுள்ளதைக் கண்டனர்.
இடிபாடுகளில் சிக்கிக்கொண்ட இரு பேருந்து பயணிகள் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டது உறுதிப்படுத்தப்பட்டது. அதே நேரத்தில் பேருந்து ஓட்டுநர் உட்பட 16 பேர் காயமடைந்தனர். பேருந்தில் பயணம் செய்த இதர 28 பேர் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
காயமடைந்த பயணிகள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாகக் கூறிய அவர், அதிகாலை 3.03 மணிக்கு மீட்புப் பணிகள் முழுமையாக நிறைவடைந்தன என்றார்.


