கோலாலம்பூர், ஜூலை 3 - இங்குள்ள தாமான் டேசாவில் நிகழ்ந்த ஒரு சாலை விபத்தைத் தொடர்ந்து நபர் ஒருவரை நோக்கி போலி துப்பாக்கியை காட்டி அச்சுறுத்தியதாக நம்பப்படும் 19 மற்றும் 27 வயதுடைய இரண்டு ஆடவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து 28 வயதான பாதிக்கப்பட்ட இளைஞரிடமிருந்து நள்ளிரவு 12.55 மணிக்கு தங்களுக்கு புகார் கிடைத்ததாகப் பிரிக்பீல்ட்ஸ் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி கூ மஷாரிமான் கூ மாமுட் கூறினார்.
இரவு 11.00 மணியளவில் பாதிக்கப்பட்ட நபர் ஓட்டிச் சென்ற ஹோண்டா சிட்டி காரின் வலது பக்க கண்ணாடியை சிவப்பு நிற டோயோட்டா யாரிஸ் கார் மோதியதாக அவர் கூறினார்.
இவ்விபத்தின் எதிரொலியாக இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. டோயோட்டா யாரிஸ் காரின் ஓட்டுநர் ஒரு கருப்பு துப்பாக்கியை வெளியே எடுத்தது
பாதிக்கப்பட்ட இளைஞரை நோக்கி காட்டியதாகக் கூறப்படுகிறது என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
அந்த ஆயுதம் டிக்டோக் செயலி மூலம் வாங்கப்பட்ட ஒரு போலி துப்பாக்கி என்பதும் அது சந்தேக நபர்களில் ஒருவருக்குச் சொந்தமானது என்பதும் விசாரணையில் கண்டறியப்பட்டது என்றார் அவர்.
குற்றவியல் சட்டத்தின் 506 வது பிரிவு மற்றும் 1960ஆம் ஆண்டு ஆயுதச் சட்டத்தின் 36(1)வது பிரிவின் கீழ் விசாரணைக்கு உதவுவதற்காக சந்தேக நபர்கள் இருவரும் வரும் சனிக்கிழமை வரை நான்கு நாட்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்என்று அவர் கூறினார்.


