SELANGOR

ஷா ஆலம் விளையாட்டு வளாகத்தின் முதல் கட்ட கட்டுமானம் திட்டமிட்டபடி தொடங்கும்

3 ஜூலை 2025, 9:45 AM
ஷா ஆலம் விளையாட்டு வளாகத்தின் முதல் கட்ட கட்டுமானம் திட்டமிட்டபடி தொடங்கும்

கிள்ளான், ஜூலை 3 - ஷா ஆலம் விளையாட்டு அரங்கை இடிக்கும் பணிகள், ஜூன் 30 ஆம் தேதி காலக்கெடுவுக்கு முன்பாகவே நிறைவடைந்த நிலையில் புதிய  ஷா ஆலம் விளையாட்டு வளாகத்தின் (கே.எஸ்.எஸ்.ஏ.) கட்டுமானப் பணிகள் திட்டமிட்டபடி நடைபெற்று வருகின்றன

அவர்கள் தற்போது மேற்கொண்டு வரும் விவரக்குறிப்பு செயல்முறை முடிவடைய ஆறு மாதங்கள் வரை ஆகும் என எதிர்பார்க்கப்படுவதாக எம்.பி.ஐ.  எனப்படும்  மந்திரி புசார் கழகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ சாய்போலியாசான் எம் யூசோப் கூறினார்.

கே.எஸ்.எஸ்.ஏ. திட்டத்தின் தொடக்கக் கட்டத்தின் ஒரு பகுதியாக  தடுப்புகளை நிறுவுவது உட்பட முதற்கட்ட பணிகள் ஏற்கனவே கட்டுமானத் தளத்தில் தொடங்கப்பட்டுள்ளன.

ஆறு மாதங்களுக்குள் விவரக்குறிப்பு செயல்முறை முடிந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்து அனைத்து ஒப்புதல்களும் பெறப்பட்டவுடன் இவ்வாண்டு அக்டோபர் அல்லது நவம்பரில் கட்டுமானப் பணிகள் தொடங்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று அவர் கூறினார்.

நேற்று இங்கு கிள்ளான் டத்தோ பண்டார்  டத்தோ அப்துல் ஹமீட் ஹூசேன் தலைமையில் நடைபெற்ற  கிள்ளான் ஆற்றின் கழிவுப் பிரிப்பு மையத்தின் தொடக்க விழாவில் கலந்து கொண்ட பிறகு அவர் செய்தியாளர்களிடம் இதனைக் கூறினார்.

பாரம்பரிய  கட்டுமான முறைகளைப் பயன்படுத்தி அசல் அடித்தளத்தை விட மூன்று முதல் நான்கு மீட்டர் உயரத்தில் கே.எஸ்.எஸ்.ஏ. கட்டப்படும் என்று சாய்போலியாசன் மேலும் தெரிவித்தார்.

குறைந்த செலவைக் கருத்தில் கொண்டு தொழில்மயமாக்கப்பட்ட கட்டிட அமைப்பை (ஐ.பி.எஸ்.) விட பாரம்பரிய கட்டுமான முறையை மாநில அரசு தேர்ந்தெடுத்தது.  எதிர்வரும் 2029 ஆம் ஆண்டிற்குள் இத்திட்டம்  முழுமையாக நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இத்திட்டத்தில் அவர்கள் வெளிப்புறமாகப் பீம்களை உற்பத்தி செய்து கிரேன்களைப் பயன்படுத்தி நிறுவுகிறார்கள். இது விரைவானது மற்றும்  தூய்மையானது. ஆயினும் செலவு அதிகம் என்று அவர் கூறினார்.

கே.எஸ்.எஸ்.ஏ. திட்டத்தின் முதல் கட்டம் விளையாட்டரங்கம், ஒரு கார் நிறுத்துமிட  பிளாசா மற்றும் இலகு ரயில்  டிரான்சிட் 3 (எல்ஆர்டி3) நிலையத்துடன்  இணைக்கும் ஒருங்கிணைந்த முனையத்தின் புனரமைப்பு ஆகியவற்றை உள்ளடக்கியது.

இரண்டாவது கட்டத்தில் விளையாட்டு மற்றும் இளைஞர் பிரிவு, 10,000 இருக்கைகள் கொண்ட உள் அரங்கம், சில்லறை விற்பனை இடங்கள் மற்றும் பொழுதுபோக்கு பகுதிகள் போன்ற வணிக மேம்பாடு சம்பந்தப்பட்டத் திட்டங்கள் நிர்மாணிக்கப்படும்.

இறுதி கட்டமாக ஒரு ஹோட்டல் கட்டும் பணி நடைபெறும். இது 2029 ஆம் ஆண்டின் இறுதிக்குள் தயாராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இறுதியில் ஷா ஆலம்  விளையாட்டுத் தொகுதி விளையாட்டு, கலாச்சாரம், சமூகம் மற்றும் தொழில் முனைவோருக்கான ஒருங்கிணைந்த மையமாக உருவாக்கம் காணும்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.