கிள்ளான், ஜூலை 3 - ஆற்றைச் சுத்தம் செய்யும் இரண்டு இயந்திரங்களைப் பயன்படுத்தி கடந்த 2019ஆம் ஆண்டு முதல் கிள்ளான் ஆற்றிலிருந்து 3,000 டன்களுக்கும் அதிகமான குப்பைகள் வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளன.
'30 நகரங்கள்' எனும் திட்டத்தின் மூலம் இன்டர்செப்டர் 002 மற்றும் 005 இயந்திரங்களைப் பயன்படுத்தி ஆறுகளின் கழிவு மேலாண்மை வெற்றிகரமாக மேம்படுத்தப்படுள்ளது என்று ரிவர்ஸ் தி ஓஷியன் கிளினப் நிறுவனத்தின் இயக்குநர் மார்கோ பியட் தெரிவித்தார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 3,000 டன் குப்பைகளை வெற்றிகரமாக அகற்றியுள்ளோம். கழிவுப் பொறிகளை (லோக் பூம்) அமைப்பதை அதிகரிக்கும் பட்சத்தில் எதிர்காலத்தில் அதிகமான குப்பைகளை சேகரிக்க முடியும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் என அவர் சொன்னார்.
நாங்கள் சேகரிக்கும் குப்பைகளில் மரக்கட்டைகள், பிளாஸ்டிக் போன்ற பொருட்களும் அடங்கும். சிலவற்றை நாங்களே அப்புறப்படுத்துவோம் அல்லது குப்பைக் கிடங்கிற்கு அனுப்புவோம் என்று மார்கோ பியட் கூறினார்.
கிள்ளான் டத்தோ பண்டார் டத்தோ அப்துல் ஹமீட் ஹூசேன் தலைமையில் நேற்று நடைபெற்ற சுங்கை கிள்ளான் கழிவுப் பிரிப்பு மையத்தின் தொடக்க விழாவில் கலந்து கொண்ட பிறகு அவர் செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார்.
கிள்ளான் ஆற்றின் தூய்மை நிலைமை பெரிதாக மாறவில்லை என்பதை சுட்டிக்காட்டிய மார்கோ, தி ஓஷியன் கிளீனப் அமைப்புக்கும் மாநில அரசுக்கும் இடையிலான ஒத்துழைப்பு விரைவில் முடிவுக்கு வராது என்று எதிர்பார்ப்பதாகச் சொன்னார்.
இந்தத் திட்டத்தில் நாங்கள் செய்வது என்னவென்றால், நதி மேலாண்மைக்கான ஒரு அமைப்பை உருவாக்கி வருகிறோம். அந்நோக்கத்திற்காகக் குறைந்தது ஐந்து ஆண்டுகளுக்கு நிதியைப் பெற முயற்சிக்கிறோம். பின்னர் அதை அரசாங்கத்திடம் ஒப்படைப்போம் என்று அவர் கூறினார்.
இன்டர்செப்டர் என்பது தி ஓஷியன் கிளீனப் முன்னெடுப்பின் ஒரு தொழில்நுட்பமாகும். இது ஒரு நாளைக்கு 100 டன் வரையிலான ஆறுகளில் மிதக்கும் குப்பைகள் கடலை அடைவதற்கு முன்பு தடுத்து சேகரிக்கும் திறன் கொண்டது.


