ஈப்போ, ஜூலை 2: தஞ்சோங் ரம்புத்தான், சவுத் வார்டில் உள்ள ஒரு வீட்டின் பின்னால் உள்ள நீர் வற்றிய கிணற்றில் மனநலம் பாதிக்கப்பட்ட மூதாட்டி ஒருவர் தவறி விழுந்தார்.
இச்சம்பவம் தொடர்பில் காலை 8.40 மணிக்கு தமது துறைக்கு அழைப்பு வந்ததைத் தொடர்ந்து தம்புன் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த தீயணைப்புக் குழு 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சம்பவ இடத்திற்கு விரைந்ததாக பேராக் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் நடவடிக்கைப் பிரிவு உதவி இயக்குநர் சபரோட்ஸி நோர் அகமது கூறினார்.
அறுபத்தெட்டு வயதான அந்த மூதாட்டி மூன்று மீட்டர் ஆழமும் ஒரு மீட்டர் சுற்றளவும் கொண்ட ஒரு நீரில்லா கிணற்றில் விழுந்து கிடந்தார்.
தீயணைப்பு வீரர்கள் பின்னர் சேவர் முறையைப் (சிக்கிய பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்கான அமைப்பு அணுகுமுறை) பயன்படுத்தினர். ஒரு உறுப்பினர் கிணற்றில் இறங்கி பாதிக்கப்பட்டவரை ஸ்ட்ரெச்சரில் இணைத்து மேலே கொண்டு வந்தார் என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட மூதாட்டி மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாகவும் இந்த மீட்பு நடவடிக்கை காலை 9.39 மணிக்கு முடிவடைந்ததாகவும் சபரோட்ஸி கூறினார்.


