புத்ராஜெயா, ஜூலை 2 - 2015ஆம் ஆண்டில் அரசு தரப்பு துணை வழக்கறிஞர் டத்தோ அந்தோணி கெவின் மொராய்ஸை கொலை செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு, முன்னாள் நோயியல் நிபுணருக்கு கர்னலுக்கு விதிக்கப்பட்ட மரணத் தண்டனையைக் கூட்டரசு நீதிமன்றம் நிலைநிறுத்தியது.
நாட்டின் தலைமை நீதிபதி துன் தெங்கு மைமுன் துவான் மாட் தலைமையிலான 3 நீதிபதிகள் குழு ஏகமனதாக அம்முடிவை அறிவித்தது.
தனது கட்சிக்காரர் மேல்முறையீட்டை மீட்டுக் கொண்டு, மரண தண்டனையை ஏற்றுக் கொள்ள விரும்புவதாகக் குணசேகரனின் வழக்கறிஞர் டத்தோ என். சிவநாதன், முன்னதாக நீதிமன்றத்திடம் தெரிவித்தார். இதையடுத்து, நீதிமன்றம் அவரின் மரண தண்டனையை நிலைநிறுத்தியது.
இருப்பினும், உயர் நீதிமன்றம் விதித்த மரணத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்ததைத் தொடர்ந்து, நிமலனும் ரவி சந்திரனும் மரணத் தண்டனையிலிருந்து தப்பினர்.
நிமலனுக்கு 35 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 12 பிரம்படிகளும் விதிக்கப்பட்ட வேளையில், 40 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட ரவிசந்திரன் 50 வயதைக் கடந்தவர் என்பதால் அவருக்குப் பிரம்படி எதுவும் வழங்கப்படவில்லை.
மேல்முறையீடு செய்திருந்த மேலும் மூவரான ஆர். தினேஷ்வரன், ஏ.கே. தினேஷ் குமார் மற்றும் எம். விஸ்வநாத் ஆகியோர் விடுவிக்கப்பட்டனர்.
கடந்த 2015-ஆம் ஆண்டு செப்டம்பர் 4-ஆம் தேதி காலை மணி 7 தொடங்கி இரவு 8 மணிக்குள் ஜாலான் டுத்தாமாஸ் ராயாவில் இருந்து சுபாங் ஜெயா நோக்கிச் சென்றுக் கொண்டிருக்கும் வழியில் கெவின் மொராய்ஸ் கொலை செய்யப்பட்டார்.


