பெட்டாலிங் ஜெயா, ஜூலை 2 - இவ்வாண்டு டிசம்பர் 31 ஆம் தேதி முதல் போலி வாகன பாதுகாப்பு பட்டை (கார் சீட் பெல்ட் சமிக்ஞை ) மற்றும் அலாரம் நிறுத்தல் போன்றவைகளை இறக்குமதி செய்வதை தடை செய்ய வேண்டும் என்று அரசாங்கம் முடிவெடுத்துள்ளது.
பாதுகாப்பு பட்டைகளின் நினைவூட்டலை முடக்க பயன்படும் சாதனங்களை மலேசியாவில் இறக்குமதி செய்வதைத் தடை செய்வதற்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை சுங்க (இறக்குமதி தடை) (திருத்தம் எண் 2) ஆணை 2025 இல் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது. இது மலேசியாவிற்குள் இத்தகைய பாகங்கள் இறக்குமதி செய்வதற்கு முழுமையான தடையை விதிக்கிறது.
முன்னதாக வாகன ஓட்டுனர்கள் பாதுகாப்பு பட்டைகளை அணியாதபோது ஒலிக்கும் அலாரச் சத்தத்தை அமைதிப்படுத்த பயன்படும் போலி உபகரணங்கள் மீதான தடையை அறிமுகப்படுத்த உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவீன அமைச்சு பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
நெகிரி செம்பிலானில் சீனப் புத்தாண்டு போக்குவரத்து நடவடிக்கையின் போது, பாதுகாப்பு பட்டை அணியாததற்காகப் பிடிபட்ட 195 குற்றவாளிகளில் கிட்டத்தட்ட 30 விழுக்காட்டினர் அலார சத்தத்தை நிறுத்துவதற்காக போலி கொக்கிகளைப் பயன்படுத்தியதைச் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.


