ஷா ஆலம், ஜூலை 2- கோல லங்காட், பண்டார் டிரோபிகானா அமான், பண்டா சவுஜனா புத்ராவில் நேற்று ஐந்து ஆடம்பர வாகனங்களுக்கு தீ வைத்ததாக சந்தேகிக்கப்படும் நான்கு நபர்களை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
வாகனங்கள் தீப்பற்றி எரிவது தொடர்பில் நேற்று அதிகாலை 6.45 மணியளவில் நபர் ஒருவரிடமிருந்து தமது துறைக்கு அழைப்பு வந்ததாகக் கோல லங்காட் மாவட்டப் போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் முகமது அக்மல்ரிசல் ரட்ஸி கூறினார்.
அந்த வாகனங்களின் உரிமையாளர் ஒரு ஆடவர் என்பதும் சம்பவம் நிகழ்ந்த நேரத்தில் அவரும் அவரது குடும்பத்தினரும் வீட்டில் இல்லை என்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது அவர் தெரிவித்தார்.
நான்கு சந்தேக நபர்கள் பாதிக்கப்பட்டவரின் கார்களுக்கு தீ வைத்தது விசாரணையில்
கண்டறியப்பட்டது. இதில் சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களை காவல்துறையினர் தற்போது தீவிரமாகக் தேடி வருகின்றனர் என அவர் குறிப்பிட்டார்.
இந்த தீயிடல் சம்பவம் தொடர்பில் தண்டனைச் சட்டத்தின் 435வது பிரிவின் கீழ் விசாரிக்கப்படுகிறது. இது தீயின் மூலம் மேற்கொள்ளப்பட்ட சதிநாசச் செயலாகும். இதற்கு அதிகபட்சமாக 14 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டவருக்கு வீட்டின் முன் பகுதியில் ஏற்பட்ட சேதம் உட்பட சுமார் 16 லட்சம் வெள்ளி இழப்பு ஏற்பட்டதாக அக்மல்ரிசால் கூறினார்.


