சிரம்பான், ஜூலை 2- ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தாமான் புக்கிட் கிறிஸ்டலில் உள்ள ஒரு வீட்டில் இறந்து கிடந்தது நேற்று மாலை 4.53 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டது.
பூட்டிய நிலையில் காணப்பட்ட அந்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவது குறித்து பொதுமக்களிடமிருந்து தங்களுக்கு தகவல் கிடைத்ததாக சிரம்பான் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி முகமது ஹத்தா சே டின் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினரும் தீயணைப்புப் படையினரும் அந்த வீட்டின் கேட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்தனர். அங்கு நடத்தப்பட்ட சோதனையில் இரண்டு படுக்கையறைகளில் அழுகிய நிலையில் மூவரின் உடல்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
உயிரிழந்தவர்கள் 61 வயதுடைய முதியவர், அவரது 59 வயது மனைவி மற்றும் 30 வயது மகன் என்பது விசாரணையில் கண்டறியப்பட்டது என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
தடயவியல் பரிசோதனைகளில் தம்பதியரின் மகனின் வலது கையின் மணிக்கட்டில் வெட்டுக்காயங்கள் காணப்பட்ட வேளையில் அவரின் பெற்றோரின் உடல்களில் சந்தேகத்திற்கிடமான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை என்றும் அவர் கூறினார்.
சம்பவத்தின் போது பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் இரத்தக் கறை படிந்த நான்கு கத்திகளும் பயன்படுத்தப்பட்ட பல்வேறு வகையான மருந்துகளும் வீட்டின் வரவேற்புக் கூடத்தில் உள்ள மேஜையில் கண்டுபிடிக்கப்பட்டன என்று அவர் தெரிவித்தார்.
மரணத்திற்கான காரணத்தை கண்டறிய மூன்று பேரின் உடல்களும் ரெம்பாவ் மருத்துவமனைக்கு பிரேதப் ரிசோதனைக்காக அனுப்பப்பட்டதாகக் கூறிய அவர், முழு பிரேதப் பரிசோதனை அறிக்கை வரும் வரை இந்த வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளதாக சொன்னார்.


