ஷா ஆலம், ஜூலை 2- கடந்தாண்டு உள்நாட்டு மொத்த உற்பத்தியில்
(கே.டி.என்.கே.) 6.3 விழுக்காட்டு வளர்ச்சியைப் பதிவு செய்ததன் மூலம்
நாட்டின் முதன்மை தொழில் துறை மற்றும் போக்குவரத்து மையம் என்ற
தனது நிலையை சிலாங்கூர் மேலும் வலுப்படுத்திக் கொண்டுள்ளது.
சிலாங்கூர் அரசு கடந்தாண்டு மொத்தம் 43,210 கோடி வெள்ளி மொத்த
உளநாட்டு உற்பத்தியை பதிவு செய்துள்ளதை மலேசிய புள்ளிவிபரத்து
துறை வெளியிட்ட கே.டி.என்.கே. 2024 அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதன் வழி தேசிய உள்நாட்டு உற்பத்தியில் சிலாங்கூரின் பங்களிப்பு 26.2
விழுக்காடாக உயர்ந்துள்ளது.
இந்த வளர்ச்சிக்கு சேவை மற்றும் உற்பத்தித் துறை உந்து சக்தியாக
விளங்குகிறது. சேவைத் துறை கடந்தாண்டை விட 6.3 விழுக்காடு உயர்வு
கண்டு 61.1 விழுக்காடாக உயர்ந்துள்ளது.
மின்சாரம் மற்றும் நீர் விநியோகம், போக்குவரத்து மற்றும் தகவல்
தொடர்பு துறை உள்ளிட்ட துணைத் துறைகள் 6.7 விழுக்காடு
வளர்ச்சியைப் பதிவு செய்துள்ள வேளையில் மொத்த மற்றும் சில்லரை
விற்பனை, உணவு மற்றும் பானம், தங்குமிட சேவைத் துறை ஆகியவை
4.6 விழுக்காடு பங்களிப்பை வழங்கியுள்ளன.
பயனீட்டாளர்களின் தேவை தொடர்ந்து அதிகரித்து வருவது மற்றும்
சுற்றுலா தொடர்பான நடவடிக்கைகளின் உத்வேகத்தை இது
பிரதிபலிக்கிறது என்று புள்ளிவிபரத் துறை வெளியிட்ட அறிக்கை ஒன்று
கூறியது.
சிலாங்கூரின் வளர்ச்சிக்கு இரண்டாவது உந்து சக்தியாக விளங்கும்
உற்பத்தி துறை 29.1 விழுக்காட்டு வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அதன்
முதன்மை துணைத் துறைகளான மின்சாரம், மின்னியல் கனிமவளப்
பொருள்கள் மற்றும் உலோகம் அல்லாத கனிமவளம் ஆகியவை இந்த
வளர்ச்சிக்கு பங்காற்றியுள்ளன.
நாட்டின் பொருளாதாரம் கடந்தாண்டு 5.1 விழுக்காடு வளர்ச்சி கண்டதாக
புள்ளிவிபரத் துறை தெரிவித்தது. அதற்கு முந்தைய ஆண்டு இந்த
வளர்ச்சி 3.5 விழுக்காடாக இருந்தது.


