NATIONAL

"நோவா 88" முதலீட்டுத் திட்டத்தில் நிறுவன ஆலோசகர் வெ. 27 லட்சம் இழந்தார்

2 ஜூலை 2025, 9:59 AM
"நோவா 88" முதலீட்டுத் திட்டத்தில் நிறுவன ஆலோசகர் வெ. 27 லட்சம் இழந்தார்

ஈப்போ, ஜூலை 2 - இணையத்தளத்தில் விளம்பரப்படுத்தப்பட்ட இல்லாத முதலீட்டுத் திட்டத்தினால் ஈரக்கப்பட்ட  எண்ணெய் மற்றும் எரிவாயு துறை ஆலோசகர் ஒருவர் 27 லட்சம் வெள்ளிக்கும் அதிகமானத் தொகையை  இழந்தார்.

“நோவா 88” எனப்படும் இணைய முதலீட்டு தளத்தின் மூலம் தாம் ஏமாற்றப்பட்டதாகக் கூறி 37 வயதான அந்த நபர் கடந்த  ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 29) ஈப்போ மாவட்டப் போலீஸ் தலைமையகத்தில் புகார் செய்ததாகப் பேராக் காவல் துறைத் தலைவர் டத்தோ நூர் ஹிசாம் நோர்டின் தெரிவித்தார்.

இந்த வழக்கில் முக்கிய சந்தேக நபராக உள்ள ஆடவருடன்  வாட்ஸ்அப் வழி ஏற்பட்ட தொடர்பைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட நபர் கடந்த 2023 ஏப்ரல் மாதம் இணையதளத்தில் ஒரு கணக்கைப் பதிவு செய்தது தொடக்கக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக அவர் சொன்னார்.

சந்தேக நபர்  வழங்கிய வங்கி கணக்கில் 30,000 வெள்ளியை  முதற்கட்டமாக அவர்  டெபாசிட் செய்தார். பின்னர் அந்த முதலீட்டைக் கண்காணிக்க ஒரு பயனர் குறியீடு மற்றும் கடவுச்சொல் பாதிக்கப்பட்ட நபருக்கு வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கடந்த 2024 ஜனவரி 5 முதல் 2025 மே 20 வரை பாதிக்கப்பட்டவர் ஏழு வெவ்வேறு கணக்குகளுக்கு 136  பரிமாற்றங்கள் மூலம் 27 லட்சத்து 1,687 வெள்ளியை அனுப்பியுள்ளார் . இந்த நிதி அவரது சேமிப்பு மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பங்களிப்பு மூலம் பெறப்பட்டது  என்று ஹிசாம் இன்றிரவு ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

லாபத்தை திரும்பப் பெற முயலும் ஒவ்வொரு முறையும்  கூடுதல் பணம் செலுத்த வேண்டியிருந்தபோது தான் ஏமாற்றப்பட்டதை பாதிக்கப்பட்டவர் உணர்ந்ததாக அவர் கூறினார்.

அவரால் இன்று வரை எந்த வருமானத்தையும் பெற முடியவில்லை. சந்தேக நபர்  சாக்குப்போக்குகளை கூறி இறுதியில் தொடர்பை துண்டித்துக் கொண்டார். மோசடி குற்றத்திற்காகக் குற்றவியல் சட்டத்தின் பிரிவு 420 இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது என்றார் அவர்.

உரிமம் பெறாத, பதிவு செய்யப்படாத அல்லது ஒழுங்குபடுத்தப்படாத இணையத்த்தளங்கள் மூலம் வழங்கப்படும் எந்தவொரு முதலீட்டையும் தவிர்க்குமாறு ஹிசாம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.

இத்தகைய முதலீடுகள் அதிக அபாயங்களைக் கொண்டுள்ளதோடு குறிப்பிடத்தக்க நிதி இழப்புகளுக்கு வழிவகுக்கும். ஆகவே,  எந்தவொரு முதலீட்டு நிறுவனத்தின் பின்னணியையும் பேங்க் நெகாரா மலேசியா அல்லது பத்திர ஆணையம் போன்ற அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகளிடம் எப்போதும் சரிபார்க்கவும் என்று அவர் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.